×

சர்க்கரை நோயால் 30 விநாடிக்கு ஒருவர் கால்கள் இழக்கும் சோகம்: டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்

சேலம்: சர்க்கரை நோயால் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒருவர் தன்னுடைய கால்களை இழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சேலம் மாமாங்கத்தில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் எம்ஜி சர்க்கரை நோய் மருத்துவமனை இணைந்து, தேசிய சர்க்கரை நோய் மருத்துவர்கள் மாநாட்டை நேற்று நடத்தின. இதில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் சர்க்கரை நோய் பேராசிரியர் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநாட்டை துவக்கி வைத்தார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மாநாட்டில் 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சர்க்கரை நோய் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:

உலக நாடுகளில் சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக அளவு சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். பாலீஷ் செய்யப்பட்ட அரிசிகளை அதிகம் உட்கொள்வதே இதற்கு காரணம். உடல் பருமன் அதிகம் இருப்பதையும் பிரச்னைக்கு அறிகுறியாக கருதலாம். முன்பெல்லாம் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது, 30 வயதைக் கடந்தவர்களுக்கு கூட சர்க்கரை நோய் வருகிறது. நமது நாட்டில் விபத்துகளால் ஏற்படும் கால் இழப்புகளை விட, சர்க்கரை நோயால் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒருவர் கால்களை இழக்கிறார். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சர்க்கரை நோய்க்கு மருத்துவம் பார்த்தால் பிற பாதிப்புகளை தடுக்க முடியும். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

The post சர்க்கரை நோயால் 30 விநாடிக்கு ஒருவர் கால்கள் இழக்கும் சோகம்: டாக்டர்கள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Salem ,India ,Salem Mamangam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த...