×

1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்ததாக கூறுவதில் உண்மை இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: ஜெயலலிதாவின் மீது புத்தகம் விழுந்ததால், தலைமுடி கலைந்தது என்று திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு கூறினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழக சட்டசபையில் 1989ம் ஆண்டு நடந்த சம்பவம் பற்றி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவரும், தமிழிசையும் அரசியலில் இருக்க வாய்ப்பு இல்லை. அப்போது மூப்பனார் காங்கிரஸ் கட்சி தலைவர். தமிழிசை தந்தை குமரி ஆனந்தன், துணை தலைவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் கலைஞர் முதல்வர். ஜெயலலிதா பிரதான எதிர்கட்சி தலைவர். நான் எதிர்கட்சி துணைத்தலைவர்.

சட்டமன்றத்தில் தற்போது இருப்பது போல் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது. கலைஞர், அன்பழகன் இருக்கைக்கு எதிர்வரிசையில் ஜெயலலிதா அருகில், நான், மூப்பனார், குமரிஅனந்தன் அமர்ந்து இருந்தோம். ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து, அப்போதைய முதல்வர் கலைஞர், பட்ஜெட்டை சிறிய டேபிள் மீது வைத்து வாசித்தார். முன்னதாக போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் நடந்த 26 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், பட்ஜெட் வாசிக்கவிடாமல் தடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக பிரச்னை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் கலைஞர் பட்ஜெட் வாசிக்கும்போது பின்னால் இருந்த ஒரு எம்.எல்.ஏ., பட்ஜெட் புத்தகத்தை பிடித்து இழுத்தார். உடனே கலைஞர் சத்தம் போட்டு திரும்பும்போது, கண்ணாடி கழன்று கீழே விழுந்தது. அப்போது அவர் தடுமாறினார். உடனே மூத்த அமைச்சர்கள் முதலமைச்சரை அறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தை பின் இருக்கைகளில் இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், கலைஞர் முகத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் குத்திதாக்கிவிட்டதாக நினைத்துவிட்டனர். இதனால் பட்ஜெட் புத்தகங்களை எங்களை நோக்கி வீசினார்கள். மைக்கை உடைத்து புத்தகங்களை வீசிக் கொண்டு இருந்தனர்.

ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக நானும், கே.கே.எஸ்.எஸ்.ஆரும் நின்றோம். அப்போதும் சில புத்தகங்கள், ஜெயலலிதாவின் தலைமீது விழுந்தது. என் மீதும் விழுந்தது. புத்தகம் விழுந்ததால் ஜெயலலிதாவின் தலை கலைந்தது உண்மைதான். உடனே வீட்டிற்கு போகலாம் என்றதும் ஜெயலலிதா சரி என்றார். இதையடுத்து பாதுகாப்பாக அழைத்து வந்து காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்தோம். சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மைதான். ஆனால் அடிதடியோ, ரத்த காயங்களோ கிடையாது. கலைஞர் முகத்தில் குத்திவிட்டதாக திமுகவும், ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்ததாக அதிமுகவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த 2 சம்பவமும் உண்மை கிடையாது. இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

The post 1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்ததாக கூறுவதில் உண்மை இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : nadu ,trunavukkarasar ,Chennai ,Trichy ,Congress ,Thirunavukkarasu ,Jayalalithah ,Tamil Nadu Congress ,Jayalalitha ,Tamil Nadu ,Thirunavukkarasar ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...