×

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா இன்று தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முக்கிய விழாக்கள் 19-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.

அதில் 19-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 20-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 21-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 22-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 23-ந் தேதி உலவாக்கோட்டை அருளியது, 24-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.

25-ந் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 26-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 28-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 29-ந்தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 30-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 

The post மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatsiyamman Temple ,Madurai ,Madurai Meenadashi Amman Temple ,Sitra Peru Festival ,Audi ,germination ,Madurai Meenatsiyamman Temple Nail Source Festival ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...