×

அருப்புக்கோட்டையில் ரூ.1.88 கோடியில் உருவாகும் நூலகம்: 90 சதவீத பணிகள் நிறைவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரூ.1.88 கோடியில் அமைக்கப்படும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைவில் திறப்பு விழா காண உள்ளது. தமிழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்டம் தோறும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மதுரை ரோட்டில் உள்ள நெசவாளர் காலனியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அருப்புக்கோட்டை கிளை நூலகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் தற்போது உள்ளது.இதனை தவிர்க்கும் வகையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி 1 கோடியே 87 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள்,
இணையதளங்களை பயன்படுத்துவதற்காக 11 கணினிகள் கொண்ட அறை, நூல்களின் முக்கிய பகுதிகளை நகலெடுக்கும் வசதி, பொதுமக்கள் வாசிக்கக்கூடிய வகையில் இலக்கியம், வரலாறு உள்ளிட்ட நூல்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்புகளுக்கான புத்தகங்கள், குழந்தைகள் விளையாட்டுடன் கல்வி பயிலும் வகையிலான பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமானப்பணிகள் தொய்வில்லாமல் தரமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தமாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அருப்புக்கோட்டையில் ரூ.1.88 கோடியில் உருவாகும் நூலகம்: 90 சதவீத பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Arupukkota ,Arapukkotta ,Library and Intellectual Centre ,Arapukkota ,Dinakaran ,
× RELATED பயணிகள் கூட்டத்தில் மினி பஸ் மோதி 3 வயது சிறுவன் பலி