×

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 4வது முறையாக இந்தியா சாம்பியன்

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் மலேசியாவை 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்ற இந்தியா 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழ் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வதேச ஆசிய இந்திய ஹாக்கி சங்க நிர்வாகிகள் இருந்தனர். போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டதால் அரங்கம் நிரம்பி வழிந்தது.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஜுக்ராஜ் சிங் அபாரமாக கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. எனினும், இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. பதில் தாக்குதல் நடத்திய மலேசிய அணிக்கு அபு கமல் (14’ ஃபீல்டு கோல்), ரகிம் ரஸி (18’ பெனால்டி கார்னர்), முகமது அமினுதின் (28’ பி.சி.) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.

இதனால் மலேசியா 3-1 என முன்னிலை பெற்றதால், இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும், சுதாரித்துக் கொண்டு ஒருங்கிணைந்து விளையாடிய இந்திய வீரர்கள் மலேசிய கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். இதன் பலனாக ஹர்மன்பிரீத் (45’ பெனால்டி ஸ்ட்ரோக்), குர்ஜாந்த் சிங் (45’ ஃபீல்டு கோல்), ஆகாஷ்தீப் (56’ ஃபீல்டு கோல்) ஆகியோர் அடுத்தடுத்து கோல் மழை பொழிய இந்தியா 4-3 என முன்னிலை பெற்றது. கடைசி நிமிடம் வரை ஹாக்கி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய இப்போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது.

* இந்திய ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் சேவையை பாராட்டி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் முகமத் இக்ரம் விருது வழங்கினார்.
* நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்ததன் நினைவாக, எழும்பூர் ஹாக்கி அரங்க வளாகத்தில் நேற்றிரவு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று ஒன்றை நட்டார்.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 4வது முறையாக இந்தியா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : India ,Asian Champions Trophy Hockey ,Chennai ,Malaysia ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்