×

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா ஜனாதிபதி முர்மு ஒப்புதல்: சட்டம் அமலுக்கு வந்ததால் முதல்வர் கெஜ்ரிவால் அதிகாரம் பறிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா, டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சட்டங்கள் அமலுக்கு வந்தன. டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட நிர்வாக முடிவுகளை எடுப்பதில் ஒன்றிய அரசுக்கு அதிகாரமளிக்கும் டெல்லி சேவைகள் மசோதா, தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆனாலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்ததைத் தொடர்ந்து, டெல்லி சேவைகள் மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதே போல, மக்களின் டிஜிட்டல் தகவல்களை பாதுகாப்பை உறுதி செய்ய டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்ட மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின் மூலம் தனிநபர்களின் டிஜிட்டல் தகவல்களை தவறாக பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.250 கோடி வரையிலும் அபராதம் விதிக்க முடியும். மேலும், குறிப்பிட்ட தேவைக்கு மட்டுமே தகவல்களை பெற வேண்டும், அவற்றை பிற நிறுவனங்களுக்கு கசியவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற பல அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. இந்த மசோதாவும் மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேறியது.

இந்நிலையில், இந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இரு மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு அவை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதே போல, பிறப்பு, இறப்பு பதிவு திருத்த சட்ட மசோதாவிற்கும் ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார், திருமண பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாக பயன்படுத்த வகை செய்யவும், தேசிய மற்றும் மாநில அளவில் பிறப்பு, இறப்பு தரவுதளத்தை உருவாக்கி, பொது சேவை மற்றும் சமூக நல திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

மழைக்கால தொடர் செயல்பாடு எப்படி?
நாடாளுமன்ற செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நிறுவனமான பிஆர்எஸ், மழைக்கால கூட்டத்தொடர் செயல்பாடு குறித்த புள்ளிவிவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ‘நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் ஒப்பிடுகையில் மக்களவை 43 சதவீதமும், மாநிலங்களவை 55 சதவீதமும் செயல்பட்டுள்ளது. ஆனாலும் இதிலேயே 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவை 17 அமர்வுகளில் 44 மணி நேரம் 15 நிமிடம் செயல்பட்டுள்ளது. இதில் 19 மணி நேரம் 59 நிமிடங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களில் 56 சதவீதம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் 4 மணி நேரம் 54 நிமிடமும், மாநிலங்களவையில் 8 மணி நேரமும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆணைய மசோதா மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா ஆகியவை வெறும் 3 நிமிட விவாதத்துடன் மக்களவையில் நிறைவேறின. மாநிலங்களவையில் தொடர்ந்து 3 நாளில் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான மசோதாக்கள் குறுகிய விவாதத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என கூறப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா ஜனாதிபதி முர்மு ஒப்புதல்: சட்டம் அமலுக்கு வந்ததால் முதல்வர் கெஜ்ரிவால் அதிகாரம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : President Murmu ,Parliament ,CM Kejriwal ,New Delhi ,Monsoon Session of Parliament ,President ,
× RELATED 28 ஆண்டுக்கு பின் திமுக நாடாளுமன்ற...