×

திருப்பதி மலைப்பாதையில் நள்ளிரவு பயங்கரம்; சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி பலி?.. வனப்பகுதியில் சடலமாக மீட்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மலைப்பாதை வழியாக பெற்றோருடன் சென்றபோது மாயமான சிறுமி, வனப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்று அடித்து கொன்றிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொவூரு மண்டலம் ேகாத்திரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் லட்ஷிதா(6). 3 பேரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக மலைப்பாதை வழியாக சென்றனர். இரவு 7.30 மணியளவில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி எதிரே சென்றபோது லட்ஷிதா திடீரென மாயமானார்.

தங்களுடன் வந்த மகள் காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அக்கம்பக்கம் என பல்வேறு இடங்களில் தேடியும் லட்ஷிதா கிடைக்கவில்லை. இதுகுறித்து தினேஷ் திருமலை 2வது நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்ஷிதாவை விடியவிடிய தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இன்று காலை வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஜூன் மாதம் கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியை சேர்ந்த கோண்டா மற்றும் ஷிரிஷா தம்பதியின் மகன் கவுசிக்(4) ஆகியோர் நடைபாதை வழியாக பாதயாத்திரை சென்றபோது கவுசிக்கை சிறுத்தை கவ்வி சென்றது.

பொதுமக்கள் விரட்டி சென்றதால் சிறுவனை, சிறுத்தை விட்டு சென்றது. அதேபோல் நேற்றிரவு சிறுமியை சிறுத்தை கவ்வி சென்று தாக்கியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மலைப்பாதையில் சிறுமி நடந்து செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தாய் சிறுத்தையா?
கடந்த ஜூன் மாதம் சிறுவன் கவுசிக்கை கவ்வி சென்ற சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அதில் 2வயதுடைய சிறுத்தை சிக்கியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை கொண்டு சென்று பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் விட்டனர். இருப்பினும் தாய் சிறுத்தை திருமலை வனப்பகுதியிலேயே இருந்ததாக கூறப்பட்டது. கவுசிக்கை தாய் சிறுத்தைதான் கவ்வி சென்றிருக்கலாம் என அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. நேற்றிரவு தாய் சிறுத்தைதான் சிறுமி லட்ஷிதாவை வாயில் கவ்விச்சென்று வனப்பகுதியில் அடித்து கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. குட்டி சிறுத்தை பிடித்ததுபோன்று, தாய் சிறுத்தையையும் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் நள்ளிரவு பயங்கரம்; சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி பலி?.. வனப்பகுதியில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati hillside ,Tirumalai ,Tirupati Etemalayan ,
× RELATED வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு...