×

ஆறும் பேறும் அவனே!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

6

எண்களின் பெருமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு எண்ணுக்கும் தனிச்சிறப்புண்டு. அந்த வகையில், ஆறு (6) என்ற எண்ணுக்கு அற்புதமான சக்தி உண்டு. எண் கணிதத்தில் இது சுக்கிரனுக்குரிய எண் என்பதால் சுகத்தைக் குறிக்கும். ஜாதக நுட்பங்களை ஆராய்கின்றபொழுது, ஆறு என்ற எண், ஆறாம் பாவத்தைக் குறிக்கிறது. ஆறாம் பாவம் என்பது நேர்மறையாக ஒருவரின் உழைப்பையும், அதில் அவர் பெரும் உயர்வையும் காட்டுகின்றது.

நாம் நம்மை அலங்கரித்துக் கொள்வது (அதாவது செயற்கை அழகு) அணிகின்ற உடைகள், அணிகலன்கள், இவற்றையெல்லாம் ஆறாம் பாவம் காட்டுகின்றது. சோம்பேறித்தனம் இல்லாத உயர்ந்த வாழ்க்கையை ஆறாம் பாவம் காட்டுகின்றது. வேலைக்காரர்கள், செல்லப்பிராணிகள், வீட்டு விலங்குகள், நம் சொல்லுக்குக் கட்டுப் படும் நபர்கள் என இவர்களை எல்லாம் ஆறாம் பாவம் காட்டுகிறது.

ஒருவர் உழைப்பின் மூலம் சேர்க்கின்ற சொத்துக்களையும், ஆறாம் பாவம் காட்டுகிறது. அதே நேரத்திலே, இந்த ஆறாம் பாவம் என்பது, நாம் சம்பாதித்துக் கொள்ளும் விரோதிகளையும், நம் உடலில் உள்ள நோய்களையும், நாம் வாங்குகின்ற கடனையும் குறிக்கிறது.உதாரணமாக, இந்த உடல் வாழ்க்கை என்பதே கடன் வாழ்க்கைதானே. பந்தம்தானே. அதனால்தானே இந்த உடலை இங்கேயே விட்டுவிட்டு நாம் செல்கின்றோம். ஆறு என்பது பாதையைக் காட்டுவதால், நாம் எந்த பாதையில் பயணிக்கிறோம் என்பதைத் தீர்மானம் செய்யவும் இந்த ஆறாம் எண் உதவுகிறது.

ஆறு என்பது வழி. அதாவது, நாம் நல்ல முறையில் வாழுகின்ற வழி. நாம் நல்ல முறையில் வாழ்ந்தபின் அடையும் பேறு அல்லது மோட்சம் அல்லது விடுதலைக்கான வழி. இவற்றை ஆறு என்கிற எண் சுட்டிக்காட்டுகின்றது. ஆறு என்பதை உபாயம் என்பார்கள். அதன்மூலம் அடையும் பயனை, அதாவது பேற்றினை உபேயம் என்று குறிப்பிடுவார்கள்.வைணவ சமயத்தில் இறைவனை அடைவதற்கான வழி இறைவன்தான். ஆகையினால் நம்மாழ்வார், ‘‘ஆறும் பேறும் அவனே’’ என்று திருவாய்மொழியில் பாடுகின்றார். சைவத்திலும் இதே நிலைதான். அவனை அடைய வேண்டுமானால் அவனுடைய அருள் வேண்டும்.

சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பன்யான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

என்பது மணிவாசகர் சிவபுராணத்தில் சொல்லிய சைவ சித்தாந்தநெறி. இனி ஆறு என்ற எண்ணின் பெருமையைப் பல கோணங்களில் காண்போம். ஆறு என்ற சொல்லுக்கு, ஆறு – எண், ஆறு – நதி, ஆறு – ஆறுதல் கொள்ளுதல், ஆறு – வழி, ஆறு – ஒழுக்கம், ஆறு – சூட்டைக் குறைத்தல் எனும் ஆறு வகைப் பொருளைக் கூறலாம். இறைவனை, ‘‘இன்பச்சுவைகளுக்குள் ஆறானவன்” என்று பாடினார் கண்ணதாசன். இந்த அறுசுவையும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம்.

அறுசுவை என்பது இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகளைக்குறிக்கும். யோக சாஸ்திரத்தில் மூலம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என அறுவகை ஆதாரங்கள் சொல்வார்கள். அதைப் போலவே – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என அறுவகை உட்பகைகள் உண்டு. அவற்றை வெல்ல வேண்டும்.
அறுவகைச் சாத்திரங்கள்

1. வேதாந்தம்,
2. வைசேடிகம்,
3. பாட்டம்,
4. பிரபாகரம்,
5. பூர்வமீமாம்சை,
6. உத்தரமீமாம்சை.

கதிரவன் தோற்றம் முதல் பப்பத்து நாழிகை (4 hours) கொண்ட நாட் பிரிவுகளாகிய காலை, நண்பகல், எற்பாடு (சாயுங்காலம்), மாலை, யாமம், வைகறை என்னும் அறுவகைச் சிறுபொழுதுகளையும், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என அறு (ஆறு) வகை பெரும்பொழுதுகளையும் இலக்கியத்தில் காணலாம்.

அரசனின் சிறப்பைக் கூறுமிடத்து,
படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (குறள் 381)

– என்று கூறுகிறது.

(அறுவகை அரசரின் அங்கங்கள் – படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்).அறுவகை ஆடுகள் – காராடு, செம்மறியாடு, கம்பளியாடு, மலையாடு, துருவாடு, பள்ளையாடு.
தமிழிலே ஆறு என்ற எண்ணிக்கையோடு பல அருமையான நூல்கள் உண்டு. பாணர்கள் எங்கே சென்றால் பொருள் பெறலாம் என்பதை வழிநடத்துகின்ற (ஆற்றுப்படுத்தும்) இந்த இலக்கியங்கள்

1. சிறுபாணாற்றுப்படை 2. பெரும் பாணாற்றுப்படை 3. பொருநராற்றுப்படை 4. கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்)

பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும்போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்குத் தரும் மரியாதைகள் ‘பிரணா மங்கள்’ அல்லது ‘வணக்கங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவை:

1) அஷ்டாங்கணம்

உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

2) ஷாஷ்டாங்கம்

உடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுக்கால், கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

3) பஞ்சாங்கம்

உடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

4) நமஸ்காரம்

இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல். (எல்லோர்க்கும்)

5) அபிநந்தனம்

இரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக்கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல். (பணிவு)

6) சரணஸ்பர்ஷம்

கால்களைத் தொட்டு வணங்குதல். (தெய்வம், தாய், தந்தை, குரு, சான்றோர்)

இந்த ஆறு வகை வணக்கங்களில் முதலான மூன்று வகை தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவை கோயில்களிலும் வழிபாட்டு அறைகளிலும் தெய்வங்களை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய வணக்க முறைகள். அஷ்டாங்கனம் எனப்படும் எட்டு அங்க வணக்கமுறையை ஆண்களும், பஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்க வணக்கமுறையைப் பெண்களும் கடைப்பிடிப்பார்கள். ஷாஷ்டாங்கம் எனப்படும் ஆறு அங்க வணக்கமுறையை யோகாசன சூரிய நமஸ்காரப் பயிற்சியின்போது கடைப்பிடிப்பார்கள்.

அடுத்தபடியான நான்காவது மற்றும் ஐந்தாவது வணக்கமான ‘நமஸ்காரமும்’ ‘அபிநந்தனமும்’ தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோருக்கு உரித்தானவை. மனிதர்களைத் தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கும் ‘நமஸ்காரம்’ மூலமாக மரியாதை செலுத்தலாம். இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பிக்கொள்ளும்போது, ‘‘நீயும் நானும் சமமானவன்” என்ற தத்துவம் தெரியப் படுத்தப்படுகின்றது. மேலும், கைகளைக் கூப்பி தலையைச் சாய்த்து மரியாதை செலுத்தும் போது ஒருவரின் பணிவுடைமை காட்டப்படுகின்றது.

இறுதியாக, கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வங்கள், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானவை. தெய்வங்களின் கால்களைத் தொட்டு வணங்குதல், இறைவனிடம் சரண்புகுதல் தத்துவத்தைக் குறிக்கின்றது. மற்றவர்களின் கால்களைத் தொட்டு வணங்குதலும் வெவ்வேறு தத்துவமுடையது.

தெய்வங்களில் ஒருமுகக் கடவுள், நான் முகக் கடவுள், ஐந்துமுகக் கடவுள், ஆறுமுகக் கடவுள் என்று உண்டு. இதில் ஆறுமுகக் கடவுளாக முருகனை வழிபடுகின்றோம். ஆறு தலை கொண்ட அவன், பக்தர்களுக்கு ஆறுதலை வழங்குகின்றான்.

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.

முருகப் பெருமானுடைய தலங்கள் எண்ணற்றவை. இருந்தாலும்கூட மிக முக்கியமான தலங்களை ஆறு படை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் உண்டு. இது ஆறு என்ற எண்ணிக்கையைக் குறிப்பது அல்ல; முருகனை அடைவதற்குரிய ஆறு அதாவது வழியைக் குறிப்பது என்றுகூட சொல்வர். எது எப்படி இருந்தாலும், எண்ணிக்கையைக் குறித்தாலும், வழியைக் குறித்தாலும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர் சோலை எனும் சோலைமலை எனும் ஆறு படை வீடுகள் புகழ் பெற்றவை அல்லவா. முருகனின் பெருமையைச் சொல்லுகின்ற மிகச்சிறந்த நூல் திருமுருகாற்றுப்படை. இதை இயற்றியவர் நக்கீரர்.

அவனுடைய மந்திரம் “சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரம். சடாட்சர மந்திரம். அவனுக்குரிய திதி ஆறாவது திதியாகிய சஷ்டி. அவனுடைய முகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலைச் செய்யும் என்பதைப் பின்வரும் பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ!
அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

வைணவ சமயத்தில் ராமானுஜரது வாழ்க்கையோடு இணைந்தது ஆறு. ஆறு வார்த்தை என்ற அற்புதமான விஷயம் அவர் வாழ்வில் உண்டு. ராமானுஜர், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை, ஆறு கேள்விகளாக, காஞ்சி வரதராஜ பெருமாளிடம் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று, தன்னுடைய குருவான திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லுகின்றார். அவர் அதை பெருமாளிடம் கேட்க, பெருமாள் ஆறு வார்த்தை களைப் பேசுகின்றார். இந்த ஆறு வார்த்தைகள் ராமானுஜரின் வாழ்க்கையை புதியபாதையில் செலுத்துகின்றது.
ராமானுஜர் வரதராஜ பெருமாளிடம் முன்வைத்த அந்த ஆறு கேள்விகள்;

1. பரம்பொருள் யார்?

2. பின்பற்ற வேண்டிய உண்மைத் தத்துவம் எது?

3. பரமனை அடைவதற்கான உபாயம் எது?

4. மரணகாலத்தில் இறைவனின் நினைவு தேவையா?

5. மோட்சம் பெறுவது எப்போது?

6. குருவாக யாரை ஏற்பது?

காஞ்சி பெருமாள் சொன்ன ஆறுவார்த்தைகள்

1. பரம்பொருள் நாமே!

எல்லோரும் அடைய வேண்டிய பரம்பொருள் நாமே!

2. பேதமே தர்சனம்!

எதுவுமே மாயை இல்லை. எல்லாமே உண்மை! விசிஷ்டாத்வைதமாகிய ஆத்மா – இறைவன்… இதுபற்றிய வேறுபாடே தத்துவம்!

3. உபாயம் ப்ரபத்தியே!

அகங்காரத்தை விடுத்து, இறைவனை சரண் அடைவதே உபாயம்! அதாவது, பிரபத்தி எனும் சரணாகதியே உபாயம்!

4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்!

இறக்கும் நேரத்தில் இறைவன் நினைவு தேவையில்லை! உடல் திறனோடு நன்றாக இருக்கும்போது நினைத்தலே போதும்! அப்போது இறைவனே நம்மை நினைப்பான்.

5. சரீரம் விடுகையில் மோட்சம்!

சரணம் அடைந்தவர்க்கு, உடலை விடும்போது மோட்சம்!

6. பெரிய நம்பிகளை குருவாகப் பற்றுவது!

வேதங்கள் நான்கு. அந்த வேதங்களுக்கு அங்கங்கள் ஆறு என்று சொல்வார்கள்.

1.சீக்ஷா – உச்சரிப்பு முறைகளை விளக்குவது
2.வியாகரணம் – இலக்கணம்
3.சந்தஸ் – செய்யுள் இலக்கணம்
4.நிருக்தம் – சொல் இலக்கணம்
5.ஜோதிடம் – வானசாஸ்திரம்
6.கல்பம் – செயல்முறை, கிரியைகளுக்கேற்ற தந்திரம், வேள்வி விளக்கம், வேள்விச்சாலை அமைக்க வேண்டிய க்ஷேத்திரக் கணிதம் ஆகியவை அடங்கியது.

இந்த ஆறு அங்கங்களுக்கு ஆறு பிரபந்தங்களை திருமங்கையாழ்வார் இயற்றினார்.

அந்த ஆறு பிரபந்தங்கள்;

1. பெரிய திருமொழி
2. திருக்குறுந்தாண்டகம்
3. திருநெடுந்தாண்டகம்
4. சிறிய திருமடல்
5. பெரியதிருமடல்
6. திருவெழுகூற்றிருக்கை.

ஆறாம் பாவம் என்பது போர், பகை மற்றும் வெற்றியையும் குறிப்பதாக ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பார்த்தோம். அதனால்தான், ராமாயணத்தில் உள்ள காண்டங்களில் ஆறாவது காண்டம் யுத்த காண்டம் என்று பெயரிடப்பட்டு, காண்டம் முழுவதும் யுத்த நடவடிக்கைகளே சொல்லப் பட்டன. திருப்பாவையில் ஆண்டாள், பகவானைப் போற்றி ஒரு பாசுரத்தைப் பாடுகின்றார். அந்த பாடல் கீழே உள்ளது.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றுஎன்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வாய்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்
எம்பாவாய்

இதிலே ஆறு முறை போற்றி மந்திரங்களைச் சொல்லிப் பாடுவதை நாம் கவனிக்க வேண்டும். இப்படி இலக்கிய ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும், சமய ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் ஆறு என்ற எண்ணின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post ஆறும் பேறும் அவனே! appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்