×

வனத்துறை அமைச்சர் தலைமையில் ஊட்டியில் பழங்குடியினர்களுடன் வனஅலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்

 

ஊட்டி,ஆக.12: ஊட்டியில் வன அலுவலர்கள், பழங்குடியினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது. ஊட்டியில் தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் வனத்துறை,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன அலுவலர்கள் மற்றும் பழங்குடியினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்ரா முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் வனபாதுகாப்பு, வனவிலங்குகளை பாதுகாப்பு,வனப்பகுதியில் வாழ்கின்ற பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர கோரி பொதுமக்கள் அணுகும் போது உரிய தகவல்களை அளிக்க வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் கோரும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பகுதி வனத்துறை சார்ந்ததா அல்லது பிற துறைகள் சார்ந்ததா என்பதை விளக்க வேண்டும். பழங்குடியின மக்கள் தங்களுக்கு ஏதேனும் அடிப்படை தேவைகள் இருக்கும் பட்சத்தில் அதுகுறித்து தெரிவித்தால் தீர்வு காணப்படும் என்றார்.

முன்னதாக பழங்குடியின மக்களிடம் இருந்து பல்வேறு விதமான கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர்கள் கௌதம், கொம்மு ஓம்காரம் முதுமலை துணை இயக்குநர்கள் வித்யா,அருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பொது மேலாளர் அசோக்குமார்,தலைமை உதவி வன பாதுகாவலர் தேவராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ஊட்டி நகராட்சி தலைவர் ரவிக்குமார் மற்றும் பழங்குடியினர் நல சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

The post வனத்துறை அமைச்சர் தலைமையில் ஊட்டியில் பழங்குடியினர்களுடன் வனஅலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Forest Minister ,Mathiventhan ,Tamil Nadu ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்