×

கடசோலை அரசு பள்ளியில் வாசிப்பு இயக்கம் துவக்கம்

 

ஊட்டி,ஆக.12: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் வாசிப்பு இயக்கம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, நீலகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் விரிவுரையாளர் தாமரை செல்வி, கோத்தகிரி கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதோடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட ஆயத்த பணிகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் எண்ணும் எழுத்தும் வகுப்பறை பார்வையிட்டு குழந்தைகளுடன் தானும் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

மாணவர்களின் படித்தல் திறன் சோதிக்கபட்டு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தனிகவனம் செலுத்த அறிவுறுத்தினார். மேலும், பள்ளியில் தமிழ்நாடு அரசின் திட்டமான வாசிப்பு இயக்கம் துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த கல்வி சார்பில் வட்டார வள மையம் மூலம் வாசிப்புக்காக பள்ளிக்கு வழங்கிய 268 நூல்களை பார்வையிட்டார். சுமார் அரைமணி நேரம் நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளையும் வாசிப்பு இயக்க புத்தகங்களை படிக்க செய்து வாசிப்பின் அவசியம், பயன்கள், வெற்றி குறித்து விரிவாக பேசினார்.

வாசிப்பை நேசிப்போம் என்ற உறுதிமொழி எடுக்கபட்டது. இதில் பரதநாட்டிய ஆசிரியர் சிவராஜ், ஆசிரியர்கள் ராஜேந்திரன், துர்கா, ரஞ்சிதா மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலர் பங்கு கொண்டனர். முன்னதாக அனைவரையும் வரவேற்ற தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தார்.

The post கடசோலை அரசு பள்ளியில் வாசிப்பு இயக்கம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Reading drive ,Kadacholai Government School ,Tamil Nadu government ,Kadacholai Government Middle School ,Kotagiri ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...