×

அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் சிறிது தூரம் கிரிவலம் சென்று வழிபாடு திருவண்ணாமலை

திருவண்ணாமலை, ஆக.12: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்தார். அதைத்தொடர்ந்து, தனியார் அமைப்புகள் சார்பில் நடந்த சாதுக்கள் சந்திப்பு, இயற்கை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை 7 மணியளவில் சுவாமி தரிசனம் செய்தார். அதையொட்டி, தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக கோயிலுக்கு வந்தார். அப்போது, கோயில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். மேலும், வைகுந்த வாயிலில் இருந்து தீபம் ஏற்றும் மலையை தரிசனம் செய்தார். பின்னர், திருக்கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள ரமணர் தவமிருந்த பாதாள லிங்க சன்னதியை தரிசனம் செய்தார். அப்போது, திருக்கோயிலின் பழமை, ஆன்மிக வரலாறு மற்றும் பாதாள லிங்க சன்னதியில் ரமணர் தவமிருந்த வரலாறு ஆகியவற்றை திருக்கோயில் சிவாச்சாரியார்கள் விவரித்தனர். அவற்றை, ஆளுநர் ஆர்வமுடன் கேட்டார். கோயிலில் தரிசனம் செய்த ஆளுநருக்கு, திருக்கோயில் சார்பில் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோயிலில் தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் வழியாக புறப்பட்டு சென்றார். பின்னர் காலை 8.45 மணியளவில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது குடும்பத்தினருடன் கிரிவலப்பாதையில் நிருதி லிங்கம் அருகே இருந்து சுமார் 15 நிமிடம் நடந்து கிரிவலம் சென்றார். அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

The post அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் சிறிது தூரம் கிரிவலம் சென்று வழிபாடு திருவண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Anamalayar Temple ,Governor R. N.N. Ravi Vharisana ,Grivalam ,Thiruvanamalai ,Thiruvandamalai ,Tamil Nadu ,Governor ,R.R. N.N. Ravi ,Swami ,Thiruvandamalai District ,Governor R. N.N. Ravi Vizhan ,
× RELATED அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தியம்...