×

அமராபுரம் பாலத்தில் தடுப்பணை

உடன்குடி, ஆக. 12: உடன்குடி அருகே அமராபுரம் கருமேனியாற்றில் ₹8 கோடியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தில் தடுப்பணை அமைக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி பஞ்சாயத்து அமராபுரம் வழியாக செல்லும் கருமேனி ஆற்றில் அடிக்கடி தண்ணீர் வருவதில்லை. சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் முழுமையாக நிரம்பிய பிறகு கடலுக்குச் செல்லும் தண்ணீர்தான் அமராபுரம் கருமேனியாற்றில் கரைபுரளும். அதுவும் மழை காலங்களில்தான் தண்ணீர் செல்லும்.

கடந்த சில ஆண்டுகளாக அமராபுரம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரத்தில் ₹8 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் அடிப்பகுதியில் சுமார் 3 அடி உயரத்திற்கு திறப்பு ஷட்டருடன் கூடிய தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்தால் இப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் கடல்நீர்மட்டமும் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவாமல் தடுக்கப்படும். எனவே ₹8 கோடியில் பாலம் கட்டும் பணியிலேயே தடுப்பணை கட்டுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post அமராபுரம் பாலத்தில் தடுப்பணை appeared first on Dinakaran.

Tags : Amarapuram Bridge ,Udengudi ,Amarapuram Karumeniyar ,Ebenkudi ,Barrage at ,Dinakaran ,
× RELATED மணப்பாடு பள்ளியில் யோகா சிறப்பு பயிற்சி