×

38 ஆயிரத்து 754 விவசாயிகள் உழவன் செயலி பதிவிறக்கம்

கிருஷ்ணகிரி, ஆக. 12: மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38,754 விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 லட்சத்து 94 ஆயிரத்து 733 விவசாயிகள் உள்ளனர். காய்கறி, பழங்கள், பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில், வேளாண்மை துறை பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து விவசாயிகளிடமும் செல்போன் உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை செல்போன் மூலம் வழங்கும் வகையில், கடந்த 2017ம் ஆண்டு உழவன் செயலி வடிவமைக்கப்பட்டது. இது 2018ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.

பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களையும், விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும், விவசாயிகளின் செல்போன் மூலம் வழங்குவதே, இந்த உழவன் செயலியின் முக்கிய நோக்கமாகும். கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் 9 சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலி, தற்போது புதுப்பிக்கப்பட்டு 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பிரபலமாகி வரும் உழவன் செயலியை, இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 38 ஆயிரத்து 754 விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: வேளாண் விவசாயிகளுக்கு வேண்டிய விபரங்களை விரைவாக வழங்கி, விவசாயிகளின் தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி, அவர்கள் அதிக வருமானம் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உழவன் செயலியை, இதுவரை இம்மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். பதிவிறக்கம் செய்யாத விவசாயிகள், வியாபாரிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைவரும், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உழவன் செயலியில் 22 வகையான சேவைகளான வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்த தகவல்கள், இடுபொருள் முன்பதிவு, வேளாண்மை துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு செய்யும் வசதி, அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீடு கட்டணம், காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள், தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள ரசாயன உரங்களின் இருப்பு, விலை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி சந்தை விலை, மாவட்டம் வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலையாளர் அன்றாடம் வழங்கும் வானிலை முன்னறிவிப்பு சேவை, இந்த செயலி மூலம் வழங்கப்படுகிறது. தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்களையும், உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழக அளவில் விவசாயிகளிடையே பிரபலமாகி வரும் உழவன் செயலியை, அனைத்து விவசாய பெருமக்களும் தங்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post 38 ஆயிரத்து 754 விவசாயிகள் உழவன் செயலி பதிவிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்