×

பொத்தேரியில் டிப்பர் லாரி மோதி பயங்கரம் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே பொத்தேரியில் தறிகெட்டு ஓடிய டிப்பர் லாரி மோதியதில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். இதையடுத்து, உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி ஜிஎஸ்டி சாலையில் நேற்று காலை 10 மணி அளவில் டிப்பர் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அப்போது, பொத்தேரி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து அங்குள்ள ரயில்வே கேட்டை கடந்து இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலர் கடந்து செல்ல காத்து நின்றனர்.

அப்போது, மணல் லோடுடன் அசுர வேகத்தில் வந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில், சாலையை கடக்க முயன்ற 3 இரு சக்கர வாகனங்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. பின்னர், சாலை தடுப்பு, மரம் மீது மோதி எதிர் திசையில் புகுந்து சிறிது தூரம் சென்று நின்றது. இதில் லாரியில் சிக்கிய இரு சக்கர வாகனங்கள் அப்பளம் போல் நொறுங்கின. விபத்தில் சிக்கிய லாரியின் முன்பக்கமும் நொறுங்கியது. லாரியில் சிக்கியதில் இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். அவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

இதை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பொதுமக்கள் அவரை மடக்கி, பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த பார்த்தசாரதி (52) என்பவரை மீட்டு, அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஜிஎஸ்டி சாலை நடுவே சாய்ந்த லாரியை கிரேன் உதவியுடன் போலீசார் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவன் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த கார்த்திக் (23), ஆற்காடு பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் ஜஸ்வந்த் (19), வண்டலூர் அடுத்த கண்டிகை பகுதியை சேர்ந்த இசைப் பள்ளி ஆசிரியர் சைமன் (47), பொத்தேரியை சேர்ந்த பவானி (38) ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் மறைமலைநகர் நகர மன்ற தலைவர் சண்முகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள் இப்பகுதியில் சிக்னல் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த விபத்து காரணமாக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரை சேர்ந்த ராஜேந்திரன் (47) என்பவரை கைது செய்தனர். அவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதாக கூறப்படுகிறது. பொத்தேரி பகுதியில் லாரி மோதியதில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் அஞ்சலி: டிப்பர் லாரி மோதி 4 பேர் பலியான தகவலை அறிந்ததும், தமிழகஅரசு சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட அவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

* 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண உதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதிக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post பொத்தேரியில் டிப்பர் லாரி மோதி பயங்கரம் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Payangaram College ,Potheri ,Chennai ,Chengalpattu ,
× RELATED கல் குவாரியில் மூழ்கி கல்லூரி...