×

திருக்குறளில் சட்டமும் நீதியும்…

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உலகெங்கும் மிகப் பழங்காலந் தொட்டே நீதிமன்றங்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. கிராமங்களில் அரசமரத்தடியில் ஊர்ப் பிரமுகர்களால் நீதி சொல்லப்படுவது முதல் பல்வேறு இடங்களில் இயங்கும் வழக்காடு மன்றங்கள் வரை நீதியை நிலைநாட்டும் இடங்கள் அன்றும் இன்றும் பலதரப்பட்டவை.ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்பச் சட்டங்கள் மாறுபடவும் செய்கின்றன. தண்டனைகளிலும் மாறுபாடுகள் உண்டு.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்தில் ஒரே குற்றத்தை ஆங்கிலேயர் செய்தால் தண்டனை மிகக் குறைவு. இந்தியர் செய்தால் அதே குற்றத்திற்குக் கடும் தண்டனை உண்டு. இப்படிப்பட்ட முரண்பாடுகள் எல்லோருக்குமான சம நீதியைச் சிதைத்தன. ஆனால் உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் படியான சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டியதில் நமது திருவள்ளுவர் முதலிடம் வகிக்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும்
செய்தொழில் வேற்றுமையான்.
(குறள் எண் 972)

எந்தக் குலத்தில் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வள்ளுவம் வலியுறுத்துகிறது. குற்றம் செய்தவர் யாராயிருந்தாலும் தண்டனை ஒன்றுதான். திருட்டு என்பது உலகெங்கும் தொன்றுதொட்டுக் கண்டிக்கப் பட்டுவரும் ஒரு குற்றம். வள்ளுவரும் அதை வன்மையாகக் கண்டிக்கிறார்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
(குறள் எண் 282)

அடுத்தவர் பொருளைத் திருடி எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளத்தில் எண்ணுவது கூடத் தீமையானது என்கிறது வள்ளுவம். திருட்டைக் கண்டித்து `கள்ளாமை’ என ஒரு தனி அதிகாரமே படைக்கிறார் வள்ளுவர். (அதிகாரம் 29) இன்று உலகின் பல்வேறு இடங்களில் பாலியல் வன்முறை நடப்பதையும் எல்லா நாடுகளிலும் அந்தக் குற்றத்திற்கு எதிராகத் தண்டனைகள் கடுமையாக்கப் படுவதையும் காண்கிறோம். திருக்குறளில் `பிறனில் விழையாமை, வரைவின் மகளிர்’ ஆகிய அதிகாரங்கள் பாலியல் குற்றத்தைப் பற்றியே பேசி எச்சரிக்கின்றன. மன்னன் சட்டத்தைக் கைக்கொண்டு குற்றவாளிகளுக்கு அவரவரின் குற்றத்திற்கேற்ப தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என்பதையும் திருக்குறள் வலியுறுத்துகிறது.

தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
(குறள் எண் 561)

பயிர் வளரவேண்டுமானால் களையெடுத்தல் மிக அவசியம். அதுபோலவே, கொலைக்குற்றம் போன்ற கொடிய குற்றங்களைச் செய்பவர்களை அரசன் கடுமையாகத் தண்டிக்க வேண்டியதும் அவசியம்.

கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.
(குறள் எண் 550)

சமுதாயத்தில் ஊடுருவும் வன்முறையாளர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை வள்ளுவம் ஆதரிக்கிறது. `குற்றம் கடிதல்’ என்ற ஒரு தனி அதிகாரமே படைத்த வள்ளுவர், குற்றங்களுக்குத் தண்டனை தருவது வேந்தனின் தொழில் என்கிறார்.

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
(குறள் எண் 549)

இந்தக் குறளுக்கு உரைசெய்த பரிமேலழகர் தண்டனைகள் `துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல்’ என மூவகைப்படும் என விளக்குகிறார்.துன்பம் செய்தலைச் சிறைத் தண்டனை எனலாம். பொருள் கோடலை சொத்தைப் பறிமுதல் செய்தல் அல்லது அபாராதம் விதித்தல் எனலாம். கோறல் என்பது மரண தண்டனை. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இத்தகைய தண்டனைகளை நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லாவிட்டால் சமுதாயத்தில் அமைதி நிலவாது.

நமது பழைய இதிகாசங்களும் இலக்கியங்களும் சட்டத்தைப் பற்றியும் நீதியைப் பற்றியும் நிறையக் கருத்துகளைத் தெரிவிக்கின்றன. ராமன், வாலி மேல் அம்பெய்தபின், சாகக் கிடக்கும் வாலிக்கு லட்சுமணன் மூலம் அளிக்கும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. ராமன் நீதிநெறியை நிலைநாட்டவே வாலியைக் கொன்றான் என்கிறான் லட்சுமணன். பரதன்தான் அப்போதைய அரசன். பரதனின் பிரதிநிதியாக அவன் அண்ணன் ராமன் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டி, குற்றவாளியான வாலியைக் கொன்றான்.

வாலிக்கு வழங்கப்பட்டது அவன் செய்த பிறன்மனை நயத்தல் என்ற குற்றத்திற்கான மரண தண்டனை. வாலி குற்றம் இழைத்துவிட்டான் என்பதால் எந்த விளக்கமும் கோராமல் தண்டனை வழங்கப் பட்டுவிட்டது. ஆனால், ராவணன் பிறன் மனை நயந்தானே தவிர அங்கே குற்றமெதுவும் நிகழவில்லை. `கண்டனன் கற்பினுக் கணியை’ என்றே அனுமன் ராமனிடம் கூறுகிறான். குற்றம் நிகழாவிட்டாலும் தகாத எண்ணம் என்பதே குற்றமானது தானே? ஆனால், அது எண்ணம் என்ற அளவிலேயே நின்றதால் அவனை மன்னிக்க ராமன் முன்வந்தான்.

ராவணனுக்குப் பல தவணைகள் கொடுத்தான். இறுதிவரை ராவணன், சீதையை ராமனிடம் ஒப்படைக்க மறுத்ததால் வேறு வழியின்றி அவனைக் கொல்ல நேர்ந்தது. ராவணனைக் கொன்றதில் தான் பாதிக்கப்பட்டது காரணமாக இருந்ததால், நியாயமே எனினும் அதில் ராமனுக்கு சுயநலம் உண்டு. ஆனால் வாலியைக் கொன்றது சமுதாயத்தின் பொதுநலன் கருதி வழங்கப்பட்ட ராஜ தண்டனையே.

பொதுவாக வயதானவர்களே சரியான நீதி வழங்குவார்கள் என்றும், இளையவர்களால் அத்தகைய நீதியை வழங்க முடியாது என்றும் கருதும் எண்ணப்போக்கு இருக்கிறது. கரிகால் சோழனிடம் நீதிகேட்டு வந்தார்கள் இரு பெரியவர்கள். அவர்கள் இளைஞனான கரிகாலன் சரியான நீதி வழங்கமாட்டான் என சந்தேகப் பட்டார்கள். அவர்களை அமரச் சொன்ன கரிகாலன் அரண்மனை உள்ளே சென்று நரைத்த தலைமுடி இருப்பதுபோல் வேடம் தரித்து வேறோர் ஆள்போல் நீதிசொல்ல வந்து அமர்ந்தான். பின்னர் அவன் சொன்ன நீதியை இருவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

கரிகாலனுக்கு இளமையிலேயே அத்தகைய கூர்மையான அறிவு எப்படி வாய்த்தது? `குலம் சார்ந்து வரும் அறிவு இளமையிலேயே தோன்றிவிடும், கல்லாமலே குலவித்தை வந்துவிடும்` என்கிறார் பழமொழி நானூறு என்ற சங்கம் மருவிய கால நூலை எழுதிய முன்றுறையரையனார் என்ற சமண முனிவர். பாடல் இதோ:

`உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப – நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவித்தை
கல்லாமல் பாகம் படும்!’

சிலப்பதிகாரம் அக்காலத்தில் நிலவிய நீதிமுறையை விளக்கமாகப் பேசுகிறது. விசாரணை செய்யாமல் தண்டிப்பது தவறு என்ற கோட்பாடு அன்று இருந்திருக்கிறது. அதனால்தான்
விசாரிக்காமல் தண்டனை வழங்கிய பாண்டியனிடம் நேரில் சென்று நீதி கேட்கிறாள் கண்ணகி.`நீர்வார் கண்ணை என்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய்!’ என அவள் நின்ற கோலத்தைக் கண்டு கேட்கிறான் பாண்டியன்.

`நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயரே!’ என்கிறாள் கண்ணகி. கோவலன் கள்வன் என்றே கருதியிருந்த பாண்டியன், `கள்வனைக் கோறல் கடுங்கோலன்று’ என்கிறான். கோறல் என்றால் மரண தண்டனை எனப் பொருள். கோவலனைக் கொலை செய்தது கள்வனாகிய அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை தானே? அது கடுங்கோல் அல்லவே என்கிறான் மன்னன்.

கடும் சீற்றமடைகிறாள் கண்ணகி. தன் சிலம்பை உடைத்து அதிலுள்ள பரல்கள் மூலம் அது பாண்டிமாதேவியின் சிலம்பல்ல என்பதை எடுத்துக்காட்டி தன் கணவன் கள்வனல்லன் என நிரூபிக்கிறாள். `பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்’ என மன்னவன் மயங்கி வீழ்ந்து இறக்க அவன் மனைவியும் உடன் இறப்பதைச் சிலம்பு சித்திரிக்கிறது. நீதிநெறியில் நிற்க வேண்டும் என அரசர்கள் நினைத்ததையும் தங்கள் ஆட்சியில் நீதி தவறினால் அவர்கள் தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளுமளவு துயருற்றதையும் இளங்கோ அடிகள் விவரிக்கிறார். கண்ணகி நீதிகேட்டு வந்த கோலத்தைப் பார்த்தவுடனேயே பாண்டியன் மனம் நடுக்கம் கொண்டதை அழகிய வெண்பாக்களால் விளக்குகிறார் இளங்கோ.

காவி உகுநீரும் கையில் தனிச் சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும் – பாவியேன்
காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும் கண்டஞ்சிக்
கூடலான் கூடா யினான்.

மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான் அக்காரிகைதன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.

மன்னர்கள் தங்களை வருத்திக் கொண்டுகூட நீதியைச் சட்டபூர்வமாக நிலைநாட்டிய உன்னதமான வரலாறுகள் தமிழகத்தில் உண்டு. அவற்றில் ஒன்று மனுநீதிச் சோழன் கதை. `மனுமுறை கண்ட வாசகம்’ என்ற தலைப்பில் அந்தச் சரிதத்தை அற்புதமான உரைநடைக் காவியமாக எழுதியுள்ளார் வள்ளலார்.அறியாமல் தன் மகன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றதற்காக மனம் பதைபதைக்கிறான் மனுநீதிச் சோழன். அந்தப் பசு நீதிகேட்டு ஆராய்ச்சி மணியை அடிக்கிறது.

அந்த ஒலி கேட்ட மன்னன் மனம் துடிக்கிறது. தாய்ப்பசு அடைந்த துயரத்தைத் தான் அடைவதே சரியான நீதி என நினைக்கிறது அவன் மனம். தன் மகனைப் பசுவின் கன்று இறந்ததைப் போலவே தேர்க்காலின் கீழ் படுக்கச் செய்து அவன் மீது தேரை ஓட்டி அவனை இறக்கச் செய்கிறான் மன்னன். பின்னர், சிவபெருமான் அருளால் மகனும் பசுங்கன்றும் உயிர்பெற்ற கதையை விவரிக்கிறது மனுமுறை கண்ட வாசகம். பொற்கைப் பாண்டியன் கதையும் நாம் அறிந்ததுதான்.

நள்ளிரவில் எல்லோர் வீட்டுக் கதவையும் தட்டிய குற்றத்திற்காகத் தன் கையைத் தானே அவன் வெட்டிக் கொண்டதாகவும் அதன்பின் தங்கக் கை அவனுக்கு வளர்ந்ததால் அவன் பொற்கைப் பாண்டியன் எனப்பட்டான் என்றும் சொல்கிறது அந்தக் கதை. இந்த வரலாறுகள் எல்லாம் சட்டத்தின் மூலம் நீதியை அக்கால மன்னர்கள் எப்படி நிலைநாட்டினார்கள் என்பதையே விவரிக்கின்றன.

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் என்ற பெயரிலேயே செய்யுள் நூல் எழுதியிருக்கிறார். மதுரையில் வாழ்ந்த திருமலை நாயக்கரின் விருப்பத்திற்கேற்ப அவர் இந்நூலை எழுதியதாகச் சொல்லப்படுகிறது. பல்வேறு அறநெறிகள் அந்நூலில் பேசப்படுகின்றன. மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் துகிலுரிய எத்தனிக்கும் முன் ராஜசபையில் சான்றோரை நோக்கி அவள் கேட்கும் கேள்வியில் மிகக் கூர்மையான சட்ட நுணுக்கம் இருக்கிறது. அவள் கேட்ட கேள்வி இதுதான்:

`பாண்டவர்கள் தங்களைச் சூதில் இழந்தபின் என்னைப் பணயப் பொருளாய் வைத்து இழந்தார்களா? அல்லது என்னை இழந்தபின் தங்களைப் பணயப் பொருளாய் வைத்து இழந்தார்களா?’ உண்மையில் பாண்டவர்கள் தங்களை இழந்த பின்தான் பாஞ்சாலியைப் பணயம் வைத்து இழந்தார்கள். தங்களை இழந்து அடிமைகளான பாண்டவர்களுக்கு மனைவியைப் பணயமாக வைக்கும் உரிமை ஏது? அவர்கள் அடிமைகளானால் அதன்பின் பாஞ்சாலிமேல் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லையே? பாஞ்சாலி அதன்பின் பாண்டவர் மனைவியல்ல, துருபதன் மகளாகிறாள் அவள். இந்த வாதத்தைக் கேட்டுத்தான் சபை விக்கித்து மெளனம் காத்தது. மகாபாரதப் பாஞ்சாலியும், சிலப்பதிகாரக் கண்ணகியும் சட்டபூர்வமாக வழக்காடுவதில் தேர்ந்த பெண் வழக்கறிஞர்களாய்த் தென்படுகிறார்கள்!

பாஞ்சாலியின் வாதம் மகாகவியின் வரிகளில் இதோ:
நாயகர் தாம்தம்மைத் தோற்றபின் – என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை – புலைத்
தாயத்திலே விலைப் பட்டபின் – எந்த
சாத்திரத் தாலென்னைத் தோற்றிட்டார்? – அவர்
தாயத்திலே விலைப் பட்டவர் – புவி
தாங்கும் துருபதன் கன்னிநான் – நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால் – பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ?

நம் திரைப்படங்களிலும் நீதியும் சட்டமும் விளையாடுகின்றன. `நீதி, நெஞ்சுக்கு நீதி, நீதி தேவன் மயக்கம். நீதிக்குப் பின் பாசம்’ என நீதியைத் தலைப்பிலேயே கொண்ட திரைப்படங்கள் பல. `சட்டம், சட்டம் ஒரு இருட்டறை, நான் சொன்னதே சட்டம், சட்டம் ஒரு விளையாட்டு, சட்டம் என் கையில், இதுதாண்டா சட்டம்’ என்றெல்லாம் சட்டத்தைத் தலைப்பில் தாங்கிய படங்களும் வந்துள்ளன. கெளரவம் திரைப்படத்தில் தந்தையும் மகனும் வழக்கறிஞர்களாக இருக்க, ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வாதாட வேண்டிய சூழல். அதற்கேற்ற வகையில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கிறது கண்ணதாசன் பாடல். தந்தை பாடுவதாக வரும் அந்தப் பாடலின் வரிகளில் சட்டமும் நீதியும் இடம்பெற்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப் பார்த்த கிளி
நான்வளர்த்த பச்சைக் கிளி
நாளை வரும் கச்சேரிக்கு…
செல்லம்மா எந்தன் செல்லம்மா…

சட்டமும் நான் உரைத்தேன்
தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கிவந்து
பாய்ந்துசெல்லப் பார்க்குதடி…

நீதிக்கே துணிந்து நின்றேன்
நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை
வீட்டினிலே வளர்த்துவந்தேன்..
செல்லம்மா எந்தன் செல்லம்மா…

சமுதாய அமைதி கருதி நீதியும் சட்டமும் என்றென்றும் நமக்குத் தேவை. என்றும் நிலைக்கக் கூடியதும் எல்லோருக்கும் பொதுவானதுமான நீதியையும் சட்டத்தையும் வள்ளுவம் பேசுவதாலேயே அது உலகப் பொதுமறை எனக் கொண்டாடப்படுகிறது.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post திருக்குறளில் சட்டமும் நீதியும்… appeared first on Dinakaran.

Tags : Thirukkural… ,Kumkum Anmikam Courts ,Thirukkural ,
× RELATED திருக்குறளில் உலகம்!