×

ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் : சிஏஜி அறிக்கை

டெல்லி : ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒன்றிய கணக்கு தணிக்கை குழுவின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டமான பாரத் மாலா ப்ரயோஜனாவின் முதற்கட்ட பணிகள் குறித்த சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பாரத்மாலா திட்டத்தில் வழங்கிய நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒன்றிய கணக்கு தணிக்கை குழு கூறியுள்ளது.

ஒப்பந்தத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என நிராகரித்தும் போலியான ஆவணங்களின் அடிப்படையில் சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியும் முறைகேடு அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நிலங்களை கையகப்படுத்தாது சுற்றுசூழல் அனுமதி பெறாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதால் சாலை திட்டங்களில் கால தாமதம் ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயர்மதிப்பு கொள்முதல் அல்லது முழுவதும் அரசு நிதியில் செயல்படுத்தப்பட்ட சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு விதிகளை பின்பற்றவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் வரை அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 82% கூடுதல் நிதியை பாரத்மாலா திட்டத்திற்கு பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி பாரத்மாலாவை சாதனை திட்டமாக காட்ட பிற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.6 லட்சம் கோடியை சாலைத் திட்டங்களுக்கு பயன்படுத்தியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் : சிஏஜி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Government ,CAG ,Delhi ,Union ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த...