×

நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பேரறிஞர் அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும், ‘இனமான பேராசிரியர்’ என்று கலைஞரால் பெருமிதத்தோடு அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய வரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கடந்த 30.11.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனாரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்’’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கடந்த 19.12.2022 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவில், அவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ அ.வெற்றியழகன், துணை மேயர் மு.மகேஷ் குமார், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், பேராசிரியர் அன்பழகனின் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
பேராசிரியர் அன்பழகன் உருவச் சிலையை திறந்து வைத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் நாள் மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்ட தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது. இனமானம் காக்கவும் – மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரிய பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் திறந்து வைத்தேன். பேராசிரிய பெருந்தகையின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும் – பொருத்தமான நாளும் இதை தவிர வேறு இருக்க முடியாது. கல்வியில் – பகுத்தறிவில் – சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப பேராசிரிய பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Anprajakan ,Nungambakkam School Education Department ,CM. G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Anbazhakan Thiruvuru ,G.K. Stalin ,Anpabhagan ,Nunambakakkam School Education Department ,Principal ,B.C. ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...