×

சட்டத்திற்கு எதிரானது என்பதால் என்ஐடி பேராசிரியர்கள் நியமன அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: என்ஐடி பேராசிரியர்கள் நியமன அறிவிப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால், ரத்து செய்து ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. என்ஐடி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஷீபா மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒன்றிய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வித்துறையின் கீழ், நாடு முழுவதும் 31 என்ஐடிக்கள் (தேசிய தொழில்நுட்ப கழகம்) செயல்படுகின்றன. இதில் திருச்சி என்ஐடி முதலிடத்தில் உள்ளது. இயக்குநர், துணை இயக்குநர், பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன. என்ஐடிக்களின் செயல்பாடுகள், பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் அனைத்தும் என்ஐடி சட்டம் மற்றும் அதன் நியமன விதிகளின் கீழ் உள்ளது.

இதன் கீழ் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் என்ஐடியின் கவர்னர்ஸ் குழு கூடி முடிவெடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதுதான் என்ஐடியின் நிர்வாக நடைமுறை. இதன்படியே என்ஐடியின் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகள் இருக்கும். இந்நிலையில், ஒன்றிய கல்வித்துறை சார்பு செயலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பதவி உயர்வு முறையை பின்பற்றாமல் அந்தந்த பதவிகளின் தகுதிக்கு ஏற்ப நேரடியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதன்படி நேரடியாக பணி நியமனம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை பதிவாளர் வெளியிட்டுள்ளார். இது விதிகளுக்கு எதிரானது. எனவே, அந்த அறிவிப்பை ரத்து ெசய்து, சட்டத்தின் படி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்து, ‘‘நேரடி நியமனம் தொடர்பான சார்பு செயலரின் சுற்றறிக்கை என்ஐடி சட்டத்திற்கு எதிரானதாக உள்ளதால் அந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பின்படி வெளியான நியமன அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’’ என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post சட்டத்திற்கு எதிரானது என்பதால் என்ஐடி பேராசிரியர்கள் நியமன அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Tags : NIT ,ICourt branch ,Madurai ,NIT… ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...