×

2 மகள்களுடன் தாய் தற்கொலை: கடிதத்தில் உருக்கமான தகவல்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஏசுதாசன். வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அனிதா (45). சகாய திவ்யா (19), சகாய பூஜா மவுலிகா (16) ஆகிய மகள்களும் உண்டு. இந்த குடும்பத்தினர் கோவையில் வசித்துவந்த நிலையில், ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அனிதா 2 மகள்களுடன் சொந்த ஊருக்கே வந்து விட்டார்.

சகாய திவ்யா இங்குள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். சகாய பூஜா மவுலிகா அழகப்பபுரம் பகுதியில் உள்ள ஒருதனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கணவர் இறந்த சோகம் மற்றும் கவனிக்க ஆள் இல்லாததால் அனிதா மிகவும் மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனாலேயே அடிக்கடி நோய்வாய்ப்பட்டுள்ளார். நோய் தீவிரமானதால் தான் இறந்துவிட்டால் 2 மகள்களையும் கவனித்துக்கொள்ள யாரும் முன்வரமாட்டார்கள் என மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நீண்டநேரமாகியும் அனிதாவின் வீட்டுக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, ஒரு அறையில் அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர். அறையில் அனிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசிடம் சிக்கியுள்ளது. அதில், ‘எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே நான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். நான் தற்கொலை செய்துவிட்டால் எனது மகள்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அனாதையாக இருக்கும் மகள்களை கவனிக்க யாரும் வரமாட்டார்கள். எனவே நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்கிறோம் என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். வீட்டில் எலி மருந்து மற்றும் தூக்க மாத்திரைகள் சிதறி கிடந்தன. எனவே அவற்றை சாப்பிட்டுவிட்டு தூக்கில் தொங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

The post 2 மகள்களுடன் தாய் தற்கொலை: கடிதத்தில் உருக்கமான தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Anjugram ,Kumari district ,Kanyakumari district ,Anjugramam ,Dinakaran ,
× RELATED அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில்...