×

ஃபுட் ஸ்பாட்

எந்த ஊர் உணவாக இருந்தாலும் சரி அதை நமது வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து சாப்பிடும் வசதி இப்போது வந்துவிட்டது. கைப்பேசிகளில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் ஆப்களின் மூலம் எந்த நாட்டு உணவையும் ருசித்து விடலாம். இப்படி இருக்க விதவிதமான உணவுகளை நேரடியாக தேடிப்போய் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய உணவுப்பிரியர்களின் ஃபுட் கைடாக இருக்கும் இந்த ஃபுட் ஸ்பாட். சென்னையில் எந்தப் பகுதியில் எந்த மாதிரியான உணவுகள் கிடைக்கும்? பலருக்கு தெரியாத, அதே நேரத்தில் வெளிநாட்டு உணவுகளில் இருந்து உள்ளூர் உணவுகள் வரை எங்கு சாப்பிடலாம்? என ஒரு தெளிவான வழிகாட்டியாக விளங்கும் இந்த ஃபுட் ஸ்பாட்.

பக்லவா

பக்லவா என்பது துருக்கி நாட்டு டெசர்ட். அரபு நாடுகளில் அனைத்து ரெஸ்டாரென்ட்டிலும் கிடைக்கும் அந்த நாட்டு இனிப்பு. நமது ஊரில் சாப்பாட்டில் பாயாசம், கேசரி எப்படி கண்டிப்பாக இடம் பிடித்திருக்கிறதோ அதேபோல அந்த நாட்டு விருந்தில் இடம் பெற்றிருக்கும் இனிப்பு இது. இந்த இனிப்பை சென்னையில் சாப்பிட நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒட்டமான் பக்லவா ரெஸ்டாரென்ட் நல்ல சாய்ஸ். இங்கு துருக்கிய டெசர்டை பல வெரைட்டிகளில் சாப்பிட்டு மகிழலாம்.

முட்டை மிட்டாய்

இது தமிழ்நாட்டின் செஞ்சி அருகே உள்ள அப்பம்பட்டு என்கிற ஊரில் கண்டுபிடித்த இனிப்பு. பால், சர்க்கரை, முட்டை, நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஸ்வீட் இது. சாப்பிட்டுப் பார்ப்பதற்கு புதுவிதமான சுவையில் இருக்கும். இதனை தயாரிக்க மட்டும் குறைந்தது 10 மணி நேரம் ஆகும். சென்னை ராயப்பேட்டை செய்யது முட்டை மிட்டாய் என்கிற கடையில் இந்த இனிப்பு கிடைக்கும். தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பமே தயாரித்து வருவதால் முட்டை மிட்டாயின் சுவை தனித்துவம் மிகுந்ததாய் இருக்கிறது.

குனாஃபா

இது ஒரு அரேபிய இனிப்பு. அரேபியர்கள் மந்தி பிரியாணியை எந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுகிறார்களோ அதே அளவு இந்த குனாஃபாவையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். துபாய் போன்ற அரபு நாடுகளில் இது ஸ்ட்ரீட் ஃபுட் ஆக கிடைக்கும். இதை சென்னையில் சாப்பிட வேண்டும் என்றால் அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள குனாஃபா ஹவுஸ் சிறந்த இடம். வெளி நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு தயாரிக்கப்படுவதால் சுவையிலும் தரத்திலும் சிறந்ததாய் இருக்கிறது.

 

The post ஃபுட் ஸ்பாட் appeared first on Dinakaran.

Tags : Foot spot ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...