×

ஒகேனக்கல்லில் 4 ஏக்கர் பரப்பளவில் காவிரி யானைகள் பாதுகாப்பு மையம்

தர்மபுரி, ஆக.10: தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் லில் 4 ஏக்கர் பரப்பளவில் காவிரி யானைகள் பாதுகாப்பு மையம் ₹10 கோடியில் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி வன மண்டலத்தில் தர்மபுரி, ஓசூர் வன கோட்டங்கள் உள்ளன. இந்த இரு மாவட்டத்திலும் 15 வனச்சரகங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, நரி, காட்டெருமை, மான், பன்றி, கழுகு, மயில், மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இந்த உயிரினங்களை பாதுகாக்க, கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 504.33 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதியை காவிரி வடக்கு வன உயிரின சரணலாயம் அரசு அறிவித்து அமைத்தது. இதில் பெரும்பகுதி கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியிலும், சிறு பகுதி தர்மபுரி மாவட்ட வனப்பகுதியும் அடங்கியதாகும். அப்போதைய ஓசூர் மற்றும் தர்மபுரி வனக்கோட்டங்களை உள்ளடக்கியதாக இச்சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஜவளகிரி வனச்சரகம், தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனச்சரகம் அடங்கிய பகுதி காவிரி வடக்கு வன உயிரின சரணலாயமாக ஏற்படுத்தப்பட்டது. புதர்காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரி ஆற்றின் கரையோரமாக நீர்மத்தி நிறைந்த ஆற்றோரக் காடு ஆகிய வாழிடங்களைக் இப்பகுதி கொண்டது. நரை அணில், யானை, சிறுத்தை, கரடி, ஆற்று நீர் நாய், செம்புள்ளி பூனை, அழுங்கு, குள்ள மான், கடம்பை மான் போன்ற 35 வகை பாலூட்டிகளும் மற்றும் மீன்பிடி கழுகு, மஞ்சள்திருடி கழுகு போன்ற சுமார் 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை போன்ற ஊர்வனங்கள் யாவும் இச்சரணாலயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்திலுள்ள கொள்ளேகால் வனக்கோட்டம், பிலகிரி ரங்கஸ்வாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், தமிழகத்தில் ஈரோடு வனக்கோட்டம் ஆகிய வனப்பகுதிகள் இந்த சரணாலயத்தைச் சுற்றியுள்ளன. இதனால் பல வித காட்டுயிர்கள் குறிப்பாக யானைகளின் இடம்பெயர்விற்கு இப்பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு தர்மபுரி, கிருஷ்ணகிரி வன மாவட்டத்தை உள்ளிடக்கிய 2வது சரணாலயமாக ”காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்” அறிவித்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான காப்புக்காடுகளை கொண்டது காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம். இச்சரணாலயமானது தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வனஉயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரியதொரு பாதுகாப்பு பகுதியாக அமைகிறது. இப்பகுதி தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும், காவிரி ஆற்றுப்படுகையில் வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் அமைகிறது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அப்பலநாயுடு கூறியதாவது: தர்மபுரி வனக்கோட்டத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனச்சரகத்தில் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், 144 யானைகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக அரசு புதியதாக காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம் வனச்சரகத்தில் ஒட்டப்பட்டி, கூட்டிராயன் பகுதி, மொரப்பூர், கேசர்குழி ஆகிய அடர்ந்த வனப்பகுதியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி, உரிகம் வனச்சரகத்தை சேர்ந்த கேஸ்தூர், மஞ்சகொண்டபள்ளி, பிலிக்கல், உரிகம், மல்லஅள்ளி, தக்கட்டி, உலிபன்டா, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, ஒட்டப்பட்டி ஆகிய அடர்ந்த வனப்பகுதி இடம் பெற்றுள்ளது. ஒகேனக்கல் செக்போஸ்ட் அருகே, வனத்தை ஒட்டிய பகுதியில் 4 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ₹10 கோடி மதிப்பீட்டில் காவரி யானைகள் பாதுகாப்பு மையம் (காவிரி எலிபேன்ட் கன்சர்வேசன் சென்டர்) அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒகேனக்கல்லில் 4 ஏக்கர் பரப்பளவில் காவிரி யானைகள் பாதுகாப்பு மையம் appeared first on Dinakaran.

Tags : Cauvery Elephant Sanctuary ,Okanagan ,Dharmapuri ,Cauvery Elephant Conservation Center ,Okenakal ,Dharmapuri district ,Okanakal ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு