×

புல்லட்சாமி அரசின் திட்டங்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசியல் சக்தி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கூடவே இருந்து முதுகில் குத்தும் வழக்கம் புதுச்சேரியில் அதிகமாக போச்சு போல இருக்கு…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் டிஜிட்டல் தொழில்நுட்ப துவக்க விழாவில் அங்குள்ள பவர்புல் பெண்மணி, புல்லட்சாமி ஆகியோர் கலந்து கொண்டாங்க. இதில் புதுச்சேரியில் உள்ள அனைத்து முக்கிய துறைகளின் அதிகாரிகளும், ஒன்றிய அரசுக்கு நெருக்கமான அதிகாரிகளும் பங்கேற்றார்களாம். இந்த விழாவில் அரைகுறை மனசோடு தான் புல்லட்சாமி பங்கேற்றாராம். விழாவில் அவர் பேச துவங்கியது முதல் முடிக்கும் வரை புலம்பி தள்ளிவிட்டாராம். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு மனசு வேண்டும். யார் குறை சொன்னாலும் அதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் மக்கள் நலனை முன்னிறுத்தி பிரச்னையை தீர்க்க முயற்சி செய்து, அரசுக்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும். ஆனால், பல அரசு அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவே இல்லை. மாதம் சம்பளம் வாங்கினால் போதும் என்று குரூப்பும், நல்ல பெயர் என் அரசுக்கு கிடைக்க கூடாது என்றும் சும்மாவே இருக்கிறாங்க. இது, அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் செயலாகவே பார்க்க வேண்டி இருக்கு. குறிப்பாக, பொதுப்பணித்துறையில் சாலை பணிகள் செய்யும் போது அது தரமாக உள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். மக்களுக்கான சேவைகள் விரைவாக கிடைக்க வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது. குறைகளை சொன்னால் அதிகாரிகளுக்கு சங்கடமாக இருக்கும் என பவர்புல் பெண்மணி, சில ஜால்ரா அதிகாரிகள் முன்னிலையில் ‘தில்’லாக புலம்பிவிட்டு நிகழ்ச்சியை முடித்து புறப்பட்டார் புல்லட்சாமி…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலம் சிறையில் ஜிபே மூலம் பணம் வாங்கிய சிறை அதிகாரிகள் ஏன் கலக்கத்தில் இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலம் சென்ட்ரல் ஜெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இருக்காங்க. எனினும் சிறை அதிகாரி பணியிடம் காலியா இருக்காம். இச்சிறைக்கு புதிதாக வந்திருக்கும் அதிகாரி நேர்மையை விரும்புகிறாராம். லஞ்சம் என்ற பெயரை கேட்டாலே ரொம்பவும் டென்சன் ஆயிடுறாராம். தான் யார் என்பதை காண்பிப்பதற்காக, சிறை வார்டன்களின் பரேடு நிகழ்ச்சியை நடத்தியிருக்காரு. அதுல, ‘‘லஞ்சம் லாவண்யம் என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. ஆனால் கைதிகளிடம் ஜிபே மூலமாக ஆறு பேர் பணம் வாங்கியிருக்காங்க. அதுவும் பெரிய அமவுன்ட். இதற்கான ஆதாரம் என்னாண்ட இருக்கு. அந்த பட்டியலை விரைவில் வெளியிடுவேன்’’ என குண்டை உருட்டி விட்டிருக்காரு. அதுவும் வார்டன்களின் முதல் எழுத்தையும், ஜிபே பண்ணிய கைதியின் முதல் எழுத்தையும் சொல்லியிருக்காரு. இதனால வார்டன்கள் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம். பணத்தை பெற்றபோது இருந்த சந்ேதாஷம், பனிஷ்மென்ட் என்றவுடன் வார்டன்களின் கை,கால்கள் நடுக்கத்தில் ஆடுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வாக்கிங் டிராவல் தேவையா என்பதில் முழு குழப்பத்தில் இருக்கும் தலைவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சி தலைவர் மவுன்டன் இனிமேல் பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்தலாமா… இல்லை, அதை பாதி யாத்திரையாக மாற்றலாமா என்று நினைக்க தொடங்கி உள்ளாராம். காரணம் நடைபயணத்தால் அவர் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கலையாம். குறிப்பா டெல்லியில் நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் இலைகட்சியின் இப்போதைய பொதுச்செயலாளரு கலந்துகிட்டு கை குலுக்கினாரு. இதனால் இலைகட்சியின் மாஜிக்கள், தான் யாத்திரை போகும் மாவட்டத்தில் எல்லாம் வந்து வரவேற்பு கொடுப்பாங்கன்னு மவுன்டன் நினைச்சாராம். ஆனால் அந்த நினைப்பு புஸ்வாணமாகிப் போச்சாம். இதனால் தாமரை தலைவரும் கடும் அப்செட்டாம். இது ஒருபுறமிருக்க, அடுத்தடுத்து வரும் மாதங்களில், ஏற்கனவே அறிவித்தபடி பயணத்தை கன்டினியூ பண்ணலாமா.. வேணாமா என்ற மைன்ட் செட்டும் மவுண்டன் தலைவரிடம் இருக்காம். அதே நேரத்தில் அவரது பட்டியல்படி இந்த ஆண்டின் கடைசி மாசத்தில் சேலத்துக்காரரின் சொந்த ஊரில் பாதயாத்திரை போவதாக திட்டமாம். அப்போது பெரிய அளவில் மாஸ் காட்டணும், அதை பார்த்து சேலத்துக்காரரே மிரளணும் என்ற ரூட்டிலும் ஒர்க் நடக்குதாம். இதை கேள்விப்பட்ட உள்ளூர் இலை கட்சிகாரர்கள், முதலில் அவரு மாங்கனி மாவட்டத்திற்கு வருவதை உறுதி செய்யட்டும். அதுக்கப்புறம் மாஸ் காட்டுவாரா? இல்லையா? என்பதை நாங்க பாத்துக்கிறோம் என்று சவால் விட்டுள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நெல்லில் பணம் பார்த்த இலை கட்சியின் மாஜி அமைச்சரிடம் கரன்சியை கறப்பது பற்றி ரூம் போட்டு யோசிப்பது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆட்சி போன பின்னாடி கட்சியில சேலத்துக்காரர் மற்றும் தேனிக்காரர் என தனித்தனி அணி உருவானபோது இவர் தேனிக்காரர் பக்கம் சாய முடிவு எடுத்தாரு. ஆனா சேலத்துகாரரு ைக ஓங்குனத பாத்து அவரோட அணியில இருக்குறாரு. சின்ன மம்மி அதிமுகவுல பவரா இருந்தப்ப அமைச்சர்களோட வருமானத்துல சரி பாதிய அவரு எடுத்து கொள்வாராம். மீதியை தான் மாஜி அமைச்சர்களிடம் வருமாம். ஆனால் அவருக்கே அல்வா கொடுத்து தப்பித்த ஒரே மாஜி அமைச்சரு ‘கிங்’ தானாம்.இப்போ தூங்கா நகரத்துல மாநாடு நடத்த சேலத்துக்காரர் அணி அறிவிச்சுருக்கு… இதுக்காக வரவேற்பு குழு, தீர்மானக் குழு என தனித்தனி குழுக்கள் அமைச்சுருக்காங்க. இதுல ‘கிங்’ பெயரை கொண்ட மாஜி அமைச்சர் உணவுக் குழு பொறுப்பாளராக போட்டுருக்காங்க. இது அவருகிட்ட இருக்குற கரன்சிய கரைக்கத்தான்னு கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க. அதுமட்டுமல்ல அவரிடம் இருந்து தேர்தலுக்கு ஒரு பெரிய ெதாகையை வாங்கவும் சேலம்காரர் முடிவு செய்துள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வனத்துறையில யார் யாரிடம் சரணடைந்து இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குமரியில் கோட்ட அதிகாரியாக இருந்த நாகங்களின் தலைவர் பெயரை கொண்ட அதிகாரி சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான பாறை பகுதியில் நின்ற பல கோடி மதிப்பிலான ஈட்டி, தேக்கு, வேங்கை, வாகை உள்ளிட்ட பலவகை உயர்ரக மரங்களையும் வெட்ட வாய்மொழியாக உத்தரவிட்டவர், டிரான்ஸ்பரில் சென்றார். இதை பயன்படுத்தி கோட்ட அதிகாரி நவீன மின்சார மரஅறுவை இயந்திரங்களை பயன்படுத்தி மரங்களை துண்டுகளாக மாற்றினாராம். இப்போது புகார் சென்னை வரை சென்றுவிட்டதாம். இப்போது, கடத்த முயன்ற தற்போதைய கோட்டஅதிகாரிக்கும், வெட்ட உத்தரவிட்ட இடமாறுதல் ஆகிசென்ற அதிகாரிக்கும் சிக்கல் எழுந்துள்ளதாம். இதற்காக தங்களை காப்பாற்றி கொள்ள தங்கள் துறை அதிகாரியிடம் சரணம் அடைந்துள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post புல்லட்சாமி அரசின் திட்டங்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசியல் சக்தி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullatsamy ,Puducherry ,Uncle ,Peter ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை