×

நாடாளுமன்ற பதவிகாலம் முடிவதால் பாகிஸ்தான் பிரதமர் இன்று ராஜினாமா?: ராணுவ தளபதியை சந்தித்ததால் பரபரப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நேற்று ராணுவ தளபதியை சந்தித்ததால், அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இம்ரான்கானை 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்துக்கு சென்ற பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசீம் முனீருடன் ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் கட்சியின் முன்னாள் தலைவரான அரிஃப் ஆல்வி என்பவர் தான் தற்போது பாகிஸ்தானின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால் நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக இன்று அவர் தனது பதவியை ராஜினாமா ெசய்வார் என்றும், அதன்பின் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானில் உரிய நேரத்தில் தேர்தல் நடக்குமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிந்த 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் 90 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ​​புதிய எல்லை நிர்ணயம் போன்ற பணிகள் நடப்பதால், இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்ததும், தேர்தல் பணி தொடங்கும். எனவே மேலும் சில மாதங்கள் தேர்தல் தள்ளிப்போகும்’ என்றனர்.

The post நாடாளுமன்ற பதவிகாலம் முடிவதால் பாகிஸ்தான் பிரதமர் இன்று ராஜினாமா?: ராணுவ தளபதியை சந்தித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Shebaz Sharif ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா