×

புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ. ராசு (85) அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன். பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

புலவர் செ.இராசு, ஜனவரி 2, 1938-இல் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள். மனைவி கெளரி அம்மாள். மூன்று மகன்கள் உள்ளனர். புலவர் ராசு தொடக்கக் கல்வியை திருப்பூர் கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், வள்ளுவர் தொடக்கப்பள்ளி, ஞானிபாளையம் லண்டன் மிசன் பள்ளி, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவுசெய்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட், முதுகலைப் பட்டம் பெற்றவர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 1959-இல் ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கினார். 1980-82-இல் தமிழக அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982-இல் இணைந்து கல்வெட்டு, தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை (4 முறை) நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர். 1959-இல் தமிழாசிரியர் பணியேற்றது முதல் கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர். பெரும்புலவர் தெய்வசிகாமணியிடம் சுவடிப்பயிற்சி, பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவிடம் கல்வெட்டுப் பயிற்சி, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் இரா.நாகசாமியிடம் தொல்லியல் பயிற்சியும் பெற்று, தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டவர்.

தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி, பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர். கல்வெட்டு, செப்பேடு, சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்கியவர். இவ்வகையில் இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன. செய்திகள் 100க்கும் மேல் வந்துள்ளன. பேராசிரியர் அ.சுப்பராயலுவுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் நிறுவி 8 ஆண்டுகள் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டவர். ஆவணம் என்ற இதழ் கொண்டுவரக் காரணமானவர்.

1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தியவர். இந்தியாவில் இதுவே முதலாவது இசைக் கல்வெட்டாகும். சங்க காலத்தில் கொடுமணம் ஊரைக் கண்டறிந்து அகழாய்வு செய்து ரோமானியர்களுடன் தொடர்புடைய நொய்யல் கரை நாகரிகம் வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த பணியாகும். தென்னிந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல் கண்டறிந்ததும் இவரே. சித்தோடு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து அறிவித்தார்.

சென்னையிலிருந்து பூனா செல்லவிருந்த தஞ்சை மராட்டியர்களின் மோடி (மோடி என்பது மராட்டிய மொழியின் சுருக்கெழுத்தாகும்) ஆவணங்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வந்த முயற்சியும் இவருடையது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலாக இவருடைய நூல் வெளியிடப்பட்டது. ஆய்வாளர்கள் நிகழ்கால வரலாற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணகி கோட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

The post புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Pulavar C. ,Chief Minister ,Stalin ,Chennai ,Pulavar C. Rasu ,Rasa G.K. Stalin ,
× RELATED மே தினத்தை ஒட்டி முதலமைச்சர்...