×

கோதாவரி ஆற்று வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உடனுக்குடன் அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

*ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தகவல்

திருமலை : கோதாவரி வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உடனுக்குடன் அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என நேரில் பார்வையிட்ட முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடந்த வாரம் கோதாவரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் ஆந்திர மாநிலத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளை இழந்தனர். அதேபோல், பயிர்கள் சேதமாகி ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் கோதாவரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கோனசீமா மாவட்டம், குணலங்கா பகுதிக்கு சென்ற முதல்வர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது, இக்கட்டான நேரத்தில் உங்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா, அதிகாரிகள் அழைத்ததும் உடனடியாக வந்தார்களா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், முதல்வர் ஜெகன்மோகன் கூறியதாவது:கடந்த கால அரசுக்கும் இந்த அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் கவனிக்க வேண்டும். கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அதிகாரிகள் ஊடகத்தில் போட்டோ வந்ததா என்று போஸ் கொடுத்து விட்டு சென்றனர். ஆனால், தற்போது கலெக்டர் முதல் அனைத்து அதிகாரிகளும் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து நிவாரண உதவிகளை வழங்கினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து சந்திப்பேன் என்று கூறினேன். அதன்படி, தற்போது மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகள் சேதமடைந்தால் ₹10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ₹2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அரசுக்கு இல்லை.

அதிகாரிகளை இழிவுப்படுத்த நான் வரவில்லை. ஏதேனும் தவறு நடந்திருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம். வெள்ளநீரில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் ஒருவாரத்தில் கணக்கீடு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்படும். ஒய்.எஸ்.ராஜசேகர் ஆட்சியின் தொடக்கத்தில் போலவரம் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும்போது ₹1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. தற்போது ₹5 லட்சம் தருகிறோம். ஜெகன் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்வான். என்றும் தீமை செய்யமாட்டான்.இவ்வாறு அவர் கூறினார்.

The post கோதாவரி ஆற்று வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உடனுக்குடன் அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Godavari river ,Andhra Chief Minister ,Jaganmohan ,Tirumala ,Godavari ,Dinakaran ,
× RELATED ஜெகன்மோகனை ரிமோட் கன்ட்ரோல் மூலம்...