×

கோரிக்கைக்கு செவிமடுக்காத நீர்வள ஆதாரத்துறை கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாய் மடைகள் சீரமைக்கப்படுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

கோவில்பட்டி : கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாய் மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு வடிநில கோட்டத்தில் அய்யநேரி, மேலக்கரந்தை, கீழ்நாட்டுக்குறிச்சி, நம்பிபுரம், சின்னூர் உள்ளிட்ட 29க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் உள்ளன. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. கண்மாய் நீரை முறையாக பயன்படுத்த, மடைகள், வரத்துக்கால் பராமரிக்க, நீர்ப்பிடிப்பு பகுதியில் தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்க, சேமித்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்த, வயல்களுக்கு செல்லும் கால் வரத்து பராமரிக்க நீரினை பயன்படுத்துவோர் சங்கம் செய்வதற்கு அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

கீழ்நாட்டுக்குறிச்சி பாசன கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 200 ஏக்கராகும். இதன் ஆயக்கட்டு 350 ஏக்கராகும். இதில் தலைமடை, ஊடுமடை, கடைமடை என மும்மடைகள் உள்ளன. இக்கண்மாய் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை நல்ல நிலையில் செயல்பட்டு வந்தது. ஆண்டுக்கு இருபோகம் விவசாயம் செய்தனர். கோடை காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து ஆண்டுதோறும் நிலங்களுக்கு தேவையான கரம்பை மண் எனப்படும் வண்டல்மண் விவசாயிகளால் அள்ளப்பட்டு ஆழப்படுத்தபட்டது.

கனிமவளத்துறை கெடுபிடி சட்டத்தால் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு யூனிட் வண்டல் மண்கூட வெளியில் நிலங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும் மண் மேடாகி கிடக்கின்றன. இதுதவிர மடைகள் பழுதடைந்து முட்புதர் மண்டி பல ஆண்டுகளாகி விட்டது.

இதனால் மழை காலங்களில் சிறிதளவு சேமிக்கப்படும் நீரை கூட விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. மடையை பழுது நீக்கம் செய்யக்கோரி 3 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட கலெக்டர், வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரக்கூடிய நிதி ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என கடந்தாண்டு பதில் அளித்தனர்.

இந்நிலையில் விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் கடந்த 3 நாட்களாக மடையும் சீரமைக்காமல், நீர்ப்பிடிப்பு பகுதியை ஆழப்படுத்தாமல் கரையில் உள்ள வேலி மரங்களை அகற்றி கரையை பலப்படுத்தும் பணி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் ஆலோசனை இன்றியும், அடிப்படை பணிகளையும் செய்யாமலும் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியின் மூலம் மழைக்கு முன்னர் மடைகளை பழுது நீக்கி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post கோரிக்கைக்கு செவிமடுக்காத நீர்வள ஆதாரத்துறை கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாய் மடைகள் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : water resources department ,Kovilpatti ,Kilnatkurichi Kanmai Madai ,resources ,Lower Nadukurichi Kanmai ,Dinakaran ,
× RELATED கீழ்பவானி வாய்க்காலில் மராமத்து...