×

மதுராந்தகத்தில் ஏரி தூர்வாரும் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

மதுராந்தகம், ஆக.9: மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது. மக்களின் கோரிக்கையின்படி, ஏரியை தூர்வார ₹120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பூமிபூஜையுடன் துவங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு 2 மாதங்களான நிலையில், மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கிருந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள், இதுவரை என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து தெரிவித்தனர். இதனைக்கேட்ட கலெக்டர் ராகுல்நாத், 8ம் தேதி நிலவரப்படி என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கையை காட்டுங்கள் என கேட்டார். இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இதனால், தொடர்ந்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய கலெக்டர் ராகுல்நாத், நான் கேட்கின்றதை சரியாக புரிந்துகொண்டு பதில் செல்லுங்கள் என தெரிவித்தார். இறுதியில் கலெக்டர், 8ம் தேதி நிலவரப்படி பணிகள் குறித்து சரியான விரிவான திட்ட அறிக்கையினை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுங்கள்’ என்றார்.

இதனையடுத்து ஒப்பந்ததாரர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது: பருவ மழைக்கு முன்னதாக ஏரிலிருந்து நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஏற்கனவே, இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் இரண்டு போகம் பயிர் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆகவே அடுத்த ஆண்டில் ஒருபோகம் அளவிற்கு விவசாயம் செய்ய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றார். மேலும், ஏரி தூர்வாரும் பணிகள், மதகுகள் கட்டும் பணி, கரை சீரமைக்கும் பணி, கரைகளை அழகுப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

The post மதுராந்தகத்தில் ஏரி தூர்வாரும் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,Madhurandakam ,Chengalpattu ,Rahulnath ,Maduraandakam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்