×

பட்டியலின, பழங்குடியின தொழில் முனைவோருக்கு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 35% மூலதன மானியம் அதிகாரி தகவல்

நாகர்கோவில், ஆக.9: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பட்டியல் இனம் மற்றும் பட்டியல் பழங்குடி இன ஊராட்சி மன்ற தலைவர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் குறித்து குமரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பெர்பெட் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் மூலமாக பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்காக பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் உற்பத்தி, சேவை, வணிக நிறுவனங்கள் தொடங்க, விரிவுபடுத்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க 35 சதவீதம் மூலதன மானியம் மற்றும் கடன்களுக்கு 6 சதவீத வட்டிய மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கான தகுதி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருக்க வேண்டும். கல்வி தகுதி ஏதும் இல்லை. வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். மேலும் உற்பத்தி சேவை தொழில்களான குளிர்பதன கிடங்குகள், விவசாயம் சார்ந்த வாகனங்களை வாடகைக்கு விடுதல், ஆடு மாடு மற்றும் கோழிப்பண்ணை, பட்டுப்புழு தயாரித்தல், கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் மற்றும் வியாபாரம் போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் பயன்பெற்று தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்குவோர்கள் மற்றும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்வோர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பட்டியலின, பழங்குடியின தொழில் முனைவோருக்கு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 35% மூலதன மானியம் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari ,District ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்