×

நீடித்த சவால்களுக்கு தீர்வு வழங்கி உலகை வழி நடத்த இந்தியா தயார்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு

புதுச்சேரி: சவால்களுக்கு தீர்வு வழங்கி உலகை வழி நடத்த இந்தியா தயாராக உள்ளதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியில், ‘கனவு நகரத்தில் சூப்பர் மனதுக்கான ஆசை’ என்ற கருத்தரங்கு நேற்று நடந்தது. இதை ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்து பேசியதாவது: அரவிந்தர் மற்றும் அன்னையின் போதனைகள் மற்றும் தத்துவம் உலகெங்கிலும் தேடுபவர்களுக்கு ஊக்கமளித்து வழிகாட்டுகிறது. ராய்ரங்பூரில் அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் கவுரவ ஆசிரியராகப் பணியாற்றும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. நான் கற்பித்ததை விட அதிகம் கற்றுக்கொண்டேன். அரவிந்தர் கூறியதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

அரவிந்தர் நாட்டுக்கும் மனித குலத்துக்கும் தனது கனவுகளை கோடிட்டு காட்டும் முக்கியமான உரையை நிகழ்த்தினார். இந்தியாவின் ஆன்மிக பரிசை உலகுக்கு வழங்க வேண்டுமென கனவு கண்டார். இன்றைய உலகில், நாடுகளிடையே இந்தியா உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற இந்தியாவின் செய்தி அரவிந்தரின் கொள்கைகளை பிரதிபலிக்கிறது. மாத்ரி மந்திரின் சிறப்பு கட்டிடக்கலை அன்னை மற்றும் அரவிந்தோவின் லட்சியங்களையும் போதனைகளையும் பிரதிபலிக்கிறது. இன்றைய உலகம் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்க கருத்துக்களை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த கருத்துக்கள் மனிதர்களை மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களையும், இயற்கையையும் மற்றும் முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியது. ஆரோவில்லில் பின்பற்றப்படும் ஆன்மிக நோக்கங்கள் முழு மனிதகுலத்தின் நலனுக்காக உள்ளது. ஆரோவில்லில் வசிப்பவர்களுக்கும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து இங்கு கூடியிருக்கும் நல்லெண்ணம் கொண்ட அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முன்னேறி வரும் சூழலில், நீங்கள் செய்யும் நல்ல பணி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதிலும், உலகை வழிநடத்தவும் இந்தியா தயாராக உள்ளது. இந்த முயற்சியில் ஆரோவில் சமூகம் பெரும் பங்களிப்பை வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை, அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.

The post நீடித்த சவால்களுக்கு தீர்வு வழங்கி உலகை வழி நடத்த இந்தியா தயார்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,President ,Drabupati Murmu ,Puducherry ,Drarubathi Murmu ,Dravupati Murmu ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...