×

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுர கொடுங்கை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்: ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் இடிந்து விழுந்த கிழக்கு கோபுர கொடுங்கை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு வாசலில் சித்திரை வீதியையும் கீழஅடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் வகையில் உள்ள தாமோதர கிருஷ்ணன் நுழைவாயில் கோபுரத்தில் முதல் நிலையில் இருந்த 20 அடி நீள கொடுங்கை எனப்படும் சிலாப் கடந்த 4ம் தேதி அதிகாலை 1.50 மணியளவில் இடிந்து கீழே விழுந்தது. ஸ்ரீரங்கம் வந்த அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இடிந்து விழுந்த பகுதியில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

இடிந்து விழுந்த கிழக்கு கோபுர கொடுங்கையை தேசிய தொழில்நுட்ப கழக (என்ஐடி) வல்லுநர்களும் ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் ஓரிரு நாளில் அறிக்கை தருவார்கள். இந்த கோபுரம் மட்டும் இல்லாமல் 21 கோபுரங்களையும் ஆய்வு செய்து அதன் ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கை கேட்டிருக்கிறோம். அறிக்கை வந்தவுடன் உடனடியாக பணிகளை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். 2015ம் ஆண்டு ரூ.34 லட்சம் செலவில் இந்த கோபுரத்தின் பழுதுபார்ப்பு பணி நடைபெற்றுள்ளது. தற்போது ரூ.98 லட்சம் செலவில் புனரமைப்பு செய்ய திட்டமிட்டு ஆணையரும் ஒப்புதல் அளித்திருக்கிறார். கிழக்கு கோபுரம் முழுவதும் பராமரிப்பு செய்யப்பட உள்ளது. இதை முழுமையாக செய்ய ரூ.2 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் போதுமான அளவு நிதி இருக்கிறது, அதே நேரம் நன்கொடையாளர்கள் இந்த பணியை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், கலெக்டரிடம் ஆலோசித்து நன்கொடையாளர்கள் மூலமாகவா அல்லது கோயில் நிதியிலிருந்து பணி மேற்கொள்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மரங்கள் மற்றும் சுதை வேலைகள் இருப்பதால் பணி முடிய ஓராண்டுக்கு மேலாகும் என தெரிவித்திருக்கின்றனர். 21 கோபுரங்களிலும் ஆய்வு செய்து அதில் ஏதாவது பழுது இருந்தால் நிச்சயம் சரி செய்யப்படும். ஸ்ரீரங்கம் ஆரியபட்டாள் வாசல் அருகே கம்பத்தடி ஆஞ்சநேயர் மாடத்தை இப்போது நகர்த்தவில்லை. 2015ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது நகர்த்தி வைக்கப்பட்டது. ஆகமத்திற்கு உட்பட்டு தான் அனைத்தும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுர கொடுங்கை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்: ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sriranangam ,East Tower ,Minister ,Sekarbabu ,Trichy ,Department of State ,Segarbabu ,Srirananga ,East Tower Corona ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...