×

பட்டாசு குடோனை ஆய்வு செய்தபோது வெடி விபத்து: டிஆர்ஓ, தாசில்தார் உட்பட 3 பேர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே பட்டாசு குடோனை ஆய்வு செய்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் டிஆர்ஓ, தாசில்தார் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரம் கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த சாபு புருஷோத்தமன், சஞ்சு ஆகியோர் நடத்தி வரும் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 29ம்தேதி நடந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஓசூர் நிலவரி திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி (52) தலைமையில் தனி தாசில்தார் முத்துபாண்டி (47) மற்றும் தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவண மூர்த்தி உள்ளிட்டோர் நேற்று மதியம் வெங்கடாபுரத்தில் உள்ள பட்டாசு குடோனை ஆய்வு செய்தனர்.

அப்போது, குடோனில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்து பெட்டிகள் கீழே விழுந்ததில் வெடித்து சிதறியது. இதில் டிஆர்ஓ பாலாஜி, தாசில்தார் முத்துபாண்டி, குடோன் மேலாளர் ஸ்ரீமந்த் (30) ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். தகவலறிந்து மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். 90 சதவீதம் வரை காயம் அடைந்த ஸ்ரீமந்த் சேலம் அரசு மருத்துவமனைக்கும், .டிஆர்ஓ பாலாஜி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டாசு குடோனை ஆய்வு செய்தபோது வெடி விபத்து: டிஆர்ஓ, தாசில்தார் உட்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tahsildar Dhenkanikottai ,Tahsildar ,Kelamangalam ,Dinakaran ,
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...