×

புல்லட், தாமரை நிர்வாகிகளை அதிர வைத்து பல கோடிகளை சுருட்டிய அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வே லூர்ல வெயில் இருக்கு… குக்கர் கட்சியில தொண்டர்கள் இருக்காங்களா…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல இருக்குற குடியேற்றம் நகரத்துல, குக்கர் கட்சியோட நகர தலையாக நி என்ற எழுத்துல தொடங்குற பெயர் கொண்டவரு இருக்காரு. அவர் சரியில்லன்னு. 4 எழுத்து பெயர் கொண்டவரை மாத்தினாங்க. இவரும் சரியில்லைன்னு இப்போது பழைய, புதிய தலைவர்களின் தொண்டர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டுள்ளார்களாம். இதனால திரும்பவும் நி என்ற எழுத்துக்காரரையே செக்ரட்ரியாக நியமிச்சிருக்காங்க. இப்ப இவரோட நடவடிக்கை சரியில்லைன்னு, அணி நிர்வாகி செல்வமானவரு, தலைமைக்கு புகார் தட்டிவிட்டு இருக்காராம்.

இப்படி மாத்தி, மாத்தி புகார் சொல்லிவந்த நிலையில, இருந்த ஒரு சிலரும் மாற்றுக்காட்சிக்கு ஓட்டம் பிடிச்சுட்டாங்க. இதனால குடியேற்றம் நகரத்துல குக்கர் கட்சி கூடாராம் காலியாக இருக்காம். யாராச்சும் இருந்தா சொல்லுங்க காலியான இடத்தை வாடகைக்கு விடலாம்னு கட்சி தொண்டர்கள் கட்சி தலைமையை வார்த்தையாலேயே வறுத்தெடுக்கிறாங்களாம். பேருக்கு பதவியில 2 பேர் இருக்காங்களாம். அவங்களையும் வெளியே எங்கேயும் காணலையாம். போலீஸ்ல ேதடி கண்டுபிடிக்க சொல்லி புகார் கொடுக்கலாமா என்ற சில நிர்வாகிகள் நக்கலாக பேசிக் கொண்டுள்ளார்களாம். இவ்வளவு நாளும் சின்னமம்மி வருவாங்க, கட்சியை கைபற்றுவாங்கன்னு குக்கர் கட்சியில இருந்தோம்…

இப்போது அது சாத்தியமில்லை என்று தெரிந்தவுடன் எல்லோரும் வெளியே போயிட்டாங்க என்று சொல்லி சிரிக்கிறது இலை முகாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வீரம் விளையும் மதுரை மண்ணுல தூங்கி வழியும் அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் பல்கலைக்கழகத்தின் 50 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு தேர்வாணையம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியை செய்யாமல் குறட்டைவிட்டு தூங்கி கொண்டுள்ளதாம். எப்போதும் ஜூன் மாதத்தில் ரிசல்ட் வெளியாகும் நிலையில், நடப்பாண்டில் தற்போது வரை ரிசல்ட் வரலையாம்.

இதனால் மாணவர்கள் மேற்படிப்பு, வேலைக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்டவற்றில் பெரும் குழப்பத்தில் பல்கலையை திட்டி தீர்க்கிறாங்க. இதுகுறித்து மாணவர்கள், பேராசிரியர்கள் துறையின் முக்கிய ஆணையராக இருப்பவரின் கவனத்துக்கு கொண்டு சென்றதற்கு அவரோ, ‘புகார் கொடுப்பதாக இருந்தால் தாராளமாகக் கொடுங்கள். நான் நினைக்கும்போது தான் ரிசல்ட் வெளியிடுவேன். எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை’ என அனைவரையும் தன் கேபினில் இருந்து பத்திரமாக திருப்பி அனுப்பி விட்டாராம். இந்த முக்கிய அதிகாரி எப்படி தூங்கினார்… ரிசல்ட் வெளியாகாமல் தாமதப்படுத்தும் தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்பதுதான் தற்போதைய தூங்கா நகர பட்டதாரிகளின் கேள்வியாக இருக்கு..

தேர்வில் பதில் எழுதிட்டோம். தூங்கா நகர் பல்கலைக்கழகம் எங்க கேள்விக்கு தான் பதிலே சொல்ல மாட்டென்கிறார்கள் என்று வருத்தப்பட்டு சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ ஒரே வாரத்தில் பல கோடி சுருட்டிய அதிகாரி ஜம்முனு கார்ல வர்றது பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இந்தியாவின் முதல் குடிமகள் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ேபானாங்க. ஜிப்மரில் ரூ.17 கோடியில் உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை நேற்று தொடங்கி வைச்சாங்க. பின்னர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தாங்க. அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிட்டாங்க.

அதன்பின் ஆரோவில்லில் நடக்கும் அரவிந்தர் நூற்றாண்டு விழாவை முடித்துவிட்டு சென்னை சென்று தனி விமானம் மூலம் டெல்லி போறாங்க. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவர் செல்லும் இடங்களில் புதிய சாலை, தடுப்பு கட்டை, முக்கிய இடங்களில் ஆர்ச், சுவர்களில் வெள்ளை அடிப்பது உள்ளிட்ட சில வேலைகளை செய்வதற்கு புதுவை அரசு ரூ.8 கோடியை மாவட்ட நிர்வாகத்துக்கு ஒதுக்கியதாம். இதில் தான் மாவட்ட அதிகாரி நல்லவன், சில கோடியை ஆட்டைய போட்டாராம். தரமற்ற பணி, நடக்காத பணிக்கு நடந்ததாக கணக்கு என்று சுமார் 2 கோடிக்கும் மேலே சுருட்டியது

தான் புதுச்சேரியையே புரட்டி போட்டு இருக்காம். நன்றாக இருந்த சாலையை சீரமைப்பது என்ற போர்வையில் தரமற்றதாக ஆக்கி விட்டாராம். சாலையில் வாகனங்கள் சென்றாலே பெயர்ந்து கொண்டு வருகிறதாம். சில சுவர்களில் மட்டும் வெள்ளை அடிக்கப்பட்டதாம். சாலையின் தடுப்பு சுவர்களில் பெயிண்ட் அடித்ததும் தரமற்றதாக இருக்கிறதாம். இதனால் புல்லட் சாமி மற்றும் தாமரை கட்சியினர் நொந்து போனாங்க. இரண்டரை வருடமாக எந்த வருமானமும் பார்க்கல, 2 நாளிலே சில கோடிகளை அதிகாரி நல்லவன் ஆட்டைய போட்டுவிட்டாரே என ஆளும் மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படையாக புலம்பி வருகின்றனர்.

இந்தியாவின் முதல் குடிமகள் சென்ற பிறகு ஊழலில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என வெட்ட வெளிச்சத்துக்கு வருமாம். இந்த பிரச்னையை பெரிய அளவில் கொண்டு செல்ல எதிர்கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகள் கையில் எடுக்க உள்ளதாம்…’ என்றார் விக்கியானந்தா. ‘‘மவுன்டன் பாத யாத்திரை ‘மடை’ மாற்றிவிட்ட கதையை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்திற்குள் அடியெடுத்து வைத்தார் தாமரை தலைவர் மவுன்டன். மாவட்ட தலைவரின் தொகுதியான வடமாநில நதி நகரத்தில் போதிய கூட்டம் இல்லாதது, மவுன்டனுக்கு பெரிய பின்னடைவாம். மாவட்ட தலைவரானவர் தாமரை கட்சியில் சேரும்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்தாங்களாம். அவங்களை கூட்டத்துல பார்க்கவே முடியலையாம்.

தொடர்ந்து குடியில் முடியும் ஊரில் நிர்வாகிகள் வரவேற்பளிக்க காத்திருக்க, மவுன்டனோ வேறொரு பகுதியில் இருந்து தனது பயணத்தை துவங்கினார். இதற்கு இளைஞரணியை சேர்ந்த மாநில நிர்வாகியே காரணமென கூறி, மாவட்ட தலைவர் அணியினர், அன்று முதல் தற்போது வரை மல்லுக்கட்டி வர்றாங்க. மேலும், அன்றைய தினம் ஒரு நிர்வாகியின் வீட்டில் இரவு விருந்துக்கு ரெடி செய்திருந்தாங்களாம். ஆனால், மவுன்டனை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துச் சென்றாராம் இளைஞரணி மாநில நிர்வாகி. இம்முறை எம்பி சீட்டை பிடிப்பதற்காகவே மவுன்டனை சுற்றி சுற்றி வருவதாக தாமரை கட்சியினரே புலம்பறாங்க…’’ என்று கூறினார்…’’ என்றார் விக்கியானந்தா.

The post புல்லட், தாமரை நிர்வாகிகளை அதிர வைத்து பல கோடிகளை சுருட்டிய அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Peter ,Vailur District ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...