×

பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் ஜெயின் வெஸ்ட் பில்டர்ஸ் கட்டிட பாதுகாப்பு குறித்து ஆய்வு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: ஜெயின் வெஸ்ட் பில்டர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் உறுதித் தன்மையின் தொழில் நுட்ப ஆய்வறிக்கையினை விரைவில் பெற்று, மக்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத் துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும், அமைச்சருமான பி.கே. சேகர்பாபு தலைமையில் சென்னை, சாலிகிராமம், ஜெயின் வெஸ்ட் பில்டர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த வளாக கட்டிடம் 5 தொகுப்புகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட 2011ம் ஆண்டு மே 17ல், சிஎம்டிஏ திட்ட அனுமதி வழங்கியுள்ளது. மேலும், கட்டிடத்திற்கு 2015ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பணிநிறைவுச் சான்றிதழும் சிஎம்டிஏ வழங்கியுள்ளது. தற்போது இவ்வளாகத்தில் குடியிருப்புகளை வாங்கியுள்ள குடியிருப்பு உரிமைதாரர்கள் கட்டிடத்தினை ஜெயின் வெஸ்ட் பில்டர்ஸ் நிறுவனம் தரமாக கட்டி தங்களுக்கு ஒப்படைக்கவில்லை என்ற கோரிக்கையின் பேரில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், இந்த ஆய்வு செய்யப்பட்டது. இக்கட்டிடத்தின் சம்பந்தமான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் இக்கட்டிடத்தின் கட்டுமான நிறுவனரை சென்னை ஐஐடியில் ரூ.2 கோடி செலுத்தி ஆய்வறிக்கையினை பெறுமாறு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி உயர் நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தது. ஆனால் கட்டிட மேம்பாட்டாளர் இதுநாள் வரை இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வளாகத்தில் குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருதி நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களிடம் முழுவதுமாக தொழில்நுட்ப ஆய்வு செய்து இக்கட்டிடத்தின் தற்போதைய நிலைக்கான காரணம் மற்றும் கட்டிடத்தின் உறுதித் தன்மையின் தொழில் நுட்ப ஆய்வறிக்கையினை விரைவில் பெற்று மக்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.

The post பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் ஜெயின் வெஸ்ட் பில்டர்ஸ் கட்டிட பாதுகாப்பு குறித்து ஆய்வு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jain ,West Builders ,Minister B. K.K. Segarbabu ,Chennai ,Jain West Builders ,Minister ,B. K.K. Segarbabu ,
× RELATED உடல் பருமன் குறைப்பு...