×

திரும்ப கிடைத்த எம்.பி. பதவி!: ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல்..!!

டெல்லி: ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் மோடி பெயரை முன்வைத்து பேசிய பேச்சுக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா திரும்பப் பெறப்பட்டது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் அமர்வு மற்றும் குஜராத் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாகி இருக்கிறார். அவரது வயநாடு தொகுதி காலியிடம் என்பதும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தேர்தலில் போட்டியிட இருந்த தடையும் ராகுலுக்கு விலகி உள்ளது. இதனிடையே நேற்று காங்கிரஸ் கட்சி மக்களவை குழு சபாநாயகரை சந்தித்து ராகுல் காந்தியின் இல்லம் தொடர்பாக பேசினர். இதையடுத்து அவர் ஏற்கனவே வசித்து வந்த துக்ளக் லேன் இல்லத்தை திரும்ப பெறுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுலின் எம்.பி. பதவி நீக்கம் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே வசித்த இல்லம் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post திரும்ப கிடைத்த எம்.பி. பதவி!: ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : M. GP ,Tughlak Len ,Rahaul Gandhu ,Delhi ,Tughlak Lan ,Rahaul Gandhi ,Tughlak ,Len ,Dinakaran ,
× RELATED மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு...