×

ஹைவேவிஸ் மலையில் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மூலிகைகள் நாசம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதியில் நேற்று மாலை பயங்கர காட்டுத் தீ பரவியது. இதில், அரியவகை மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத்துறையினர் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குமலை தொடர்ச்சியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. ஹைவேவிஸ் மலைப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் ஏலம், காப்பி, தேயிலை, மிளகு என பணப்பயிர்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இப்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் தொடக்கமான தென்பழனியில் வனத்துறை செக்போஸ்ட் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில நேற்று மாலை 5 மணியளவில் தென்பழனி அருகே மகிழம்பூ 1வது கொண்டை ஊசி வளைவில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இந்த தீ படிப்படியாக பெருமாள்மலை, கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் சுற்றியுள்ள மலைப்பகுதிகளுக்கும் பரவியது. இதுபற்றி தகவலறிந்ததும் சின்னமனூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், கொழுத்துவிட்டு எரிந்த தீயை அவர்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பின்னர் தேனி மற்றும் உத்தமபாளையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் இன்று அதிகாலை 5 மணி வரை போராடி தீயை அணைத்தனர். சுமார் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வனப்பகுதியில் இருந்த அரியவகை மூலிகை மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post ஹைவேவிஸ் மலையில் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மூலிகைகள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Highavis ,Chinnamanore ,Highwavis ,Chinnamanur ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை;...