×

தேசிய கைத்தறி நெசவாளர்கள் தின விழா சித்தூர் மாவட்டத்தில் கைத்தறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை

*கண்காட்சியை தொடங்கி துணை கலெக்டர் பேச்சு

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் கைத்தறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கைத்தறி நெசவாளர் தினத்தையொட்டி சிறப்பு கண்காட்சியை தொடங்கி வைத்து துணை கலெக்டர் ஸ்ரீநிவாஸ் பேசினார்.சித்தூரில் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கைத்தறி நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு துணை கலெக்டர் ஸ்ரீநிவாஸ் கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

2015ம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி நெசவாளர்கள் தினத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது. கைத்தறி நெசவாளர்கள் தயாரித்து வரும் கைத்தறி பொருட்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.மாநில அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டிற்கு ₹24 ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறது. அதேபோல் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கி வருகிறது.

அதேபோல் கைத்தறி நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. ₹50ஆயிரம் கடன் பெற்றுக்கொண்டால் ₹10 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது. ₹5லட்சம் கடன் பெற்றால் ₹25 ஆயிரம் கடன் தள்ளுபடி வழங்குகிறது. அதேபோல் நெசவாளர்களுக்கு மின்சார வசதி, மின் கட்டண தள்ளுபடி உள்ளிட்டவை மாநில அரசு வழங்கி வருகிறது.

ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி மார்க்கெட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். மிக விரைவில் சித்தூர் மாவட்டத்தில் கைத்தறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வாரத்திற்கு ஒரு முறை கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

மேலும் பொதுமக்களும் வாரத்திற்கு ஒருமுறை கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அப்போதுதான் கைத்தறி நெசவாளர்கள் பயனடைவார்கள். சித்தூர் மாவட்டத்தில் 10 கைத்தறி நெசவாளர்கள் சங்கம் உள்ளது. மாவட்டத்தில் அதிக அளவு சதும், சோமலா, நகரி, புத்தூர், பீலேர் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவுத்தொழில் அதிக அளவு உள்ளது.

அவர்களின் நலனுக்காக மாநில அரசு பல்வேறு நமது திட்ட உதவிகள் செய்து வருகிறது. அதேபோல் சித்தூர் மாவட்டத்தில் 50 வயது கடந்த நெசவாளர்கள் 332 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ₹2,750 நிதி உதவி வழங்கி வருகிறது. அரசு 60வயது கடந்தவர்களுக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால் கைத்தறி நெசவாளர்களுக்கு மட்டும் 50 வயது கடந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி வருகிறது.

மாநிலம் முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு மாநில அரசு ₹182 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளது. இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. ஆகவே கைத்தறி நெசவாளர்கள் மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு பயனடைய வேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் அதிகாரிகள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பலர் பங்கேற்றனர்.

The post தேசிய கைத்தறி நெசவாளர்கள் தின விழா சித்தூர் மாவட்டத்தில் கைத்தறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : National Linen Weavers Day Festival ,Linen Market ,Chittoor district ,Chittoor ,National Linen Weavers Day Festival of Chittoor District Linen Market ,
× RELATED ₹3.80 லட்சம் மதிப்புள்ள பைக்குகள்...