×

சிப்பிக்குள் முத்து

நவரத்தினங்களில் ஒன்றாக மிகப் பழங்காலத்திலிருந்தே மக்களின் மனம் கவர்ந்த ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பொருளாக முத்து உள்ளது. தமிழகத்தில் பண்டையப் பாண்டியநாடு முத்துக்களுக்கு
பெயர் பெற்றது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கு முத்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது வரலாற்றுப் பதிவுகளால் அறியப்பட்டுள்ளது.

இருவாயில் (Bivalve) மெல்லுடலி உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் இருந்துதான் முத்து உருவாகின்றது. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக மெல்லுடலிக்குள் சுரக்கும் ஒருவகை திரவப்பொருள் அந்த நுண்துகளின் மீது பூசப்படுகின்றது. இச்செயல்பாடே முத்து எனும் பெறுமதிப்பு வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப்படுகின்ற பொருள் அரகோனைட்டு அல்லது கல்சைட் போன்ற படிக வடிவிலுள்ள கால்சியம் கார்பனேட்டையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகை பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். இது நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் என அழைக்கப்படுகிறது. இப்பொருள் பல படைகளாக வெளியிலிருந்து புகும் நுண்துகள்கள் மீது பூசப்பட்டு உருவாகும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது. பெர்சிய வளைகுடா, செங்கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி போன்ற பல இடங்களில் கடலுக்கடியில் விரவி காணப்படுகின்றது. ஒவ்வொரு சிப்பிக்குள்ளும் ஒரு முத்து உருவாகிறது. தமிழகத்தை பொறுத்த வரை முத்து உற்பத்தியில் தூத்துக்குடி முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

முத்தில் ஆர்கனைட்டு, காண்கியோலின், நீர் என்ற பிரதான மூலகங்கள் காணப்படுகின்றன. முத்து உருவாகும்போது மெல்லிய அடுக்குகள் சேர்வதால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. இதனால் சாதாரண முத்துகள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன. கறுப்பு நிறமான முத்துகளும் மிக அருமையாகக் காணப்படுகின்றன. இவ்வகையான முத்துகளுக்கு மகத்துவம் அதிகம்.கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துச்சிப்பி. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளால் ஆனது. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. முட்டை வடிவிலான முத்துகள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துகளுக்கே மதிப்பு அதிகம்.தற்போது செயற்கையான முத்துகளின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் இயற்கையான முத்தின் மதிப்பும், மக்களிடம் உள்ள வரவேற்பும் தனித்துவமானதுதான்.

 

The post சிப்பிக்குள் முத்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து