×

கவனகக் கலை நினைவாற்றலை பெருக்கும்

பழங்காலத்திலிருந்தே உள்ள பல வகை கலைகளுள் ஒன்று நினைவாற்றலை மனதில் நிறுத்தி அதைத் கவனத்தில் கொண்டு, மீண்டும் நினைவு படுத்தி கூறும் கவனகக் கலை ஆகும் . இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்றாகும். கவனகம் என்பது ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி, முடிவில் தொகுத்துக் கூறுவதாகும். இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவமாகும்.ஒருவர் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களில் தனது கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலையே கவனகமாகும். இதனை வடமொழியில் அவதானம் என்பர். இக்கலையை நிகழ்த்தும் கலைஞர் கவனகர் எனப்படுகிறார். இவரை வடமொழியில் அவதானி என்பர். இதைக் கொண்டுதான் ஒரே நேரத்தில் எட்டு செயல்களில் கவனத்தைக் குவிப்பதற்கு அஷ்டாவதானி என்ற சொல் வழங்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் செயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கவனகம் நான்கு, எட்டு, பத்து, பதினாறு, முப்பத்திரண்டு, நூறு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.நமது முன்னோர்கள் ,நூறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி சொல்லக்கூடிய அளவுக்கு ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். கவனகக்கலை நினைவாற்றலை பெருக்கும். மனதும், உணர்ச்சியும் நமக்குத் தனி தனியாக வழிகாட்டும். ஆனால் மனது சொல்படிதான் நாம் நடக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி அடைய முடியும். இதற்கான பயிற்சியை மேற்கொண்டால் மாணவர்கள் கல்வி கற்பதில் நினைவாற்றலின் தன்மையை வளமாக்கலாம். எந்த ஒன்றிலும் வெற்றிக்கு வித்திடுவது பயிற்சிதான்.

கவனகம் பலவகைகளில் உள்ளன. அவற்றில் குறள் கவனகம், பறவை கவனகம், எண் கவனகம், விலங்கு கவனகம், எழுத்துக் கவனகம், நூல் கவனகம், கூட்டல் கவனகம், மலர்க் கவனகம், பெயர்க் கவனகம், பழக் கவனகம், ஆண்டுக் கவனகம், நாடுகள் கவனகம், வண்ணக் கவனகம் என்பவையும் அடங்கும். உதாரணமாக உலக நாடுகளின் பெயரைச் சொன்னால், அந்த நாட்டுத் தலைநகரத்தின் பெயரைக் கூற வேண்டும். தலைநகரத்தின் பெயரை சொன்னால் உலக நாடுகளின் பெயரைச் சொல்ல வேண்டும். இது நாடுகள் கவனகமாகும். திருக்குறளில் முதல் சீரை சொன்னால், குறளை சொல்லுதல்,குறளை சொன்னால்,குறளின் எண்ணை சொல்லுதல்,குறளின் எண்ணை சொன்னால் ,குறளை சொல்லுதல் போன்ற பல்வேறு வகைகளில் நினைவாற்றலை வெளிப்படுத்துவது குறள் கவனகமாகும். 

The post கவனகக் கலை நினைவாற்றலை பெருக்கும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு...