×

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் : உலகப் பாரம்பரியச் சின்னம்

வரலாற்றுச்சுவடுகளைத் தாங்கியுள்ள தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது தாராசுரம் என்னும் ஊர். இந்த ஊருக்குப் புகழ் சேர்க்கும் விதமாக இரண்டாம் ராஜராஜ சோழ மன்னனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்று.1987ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2004ல் கங்கைகொண்ட சோழீச்வரம் கோயிலும் மற்றும் ஐராவதீஸ்வரர் கோயிலும் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புகளை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.

காண்பதற்கு ஆச்சர்யத்தையும் பிரமிப்பை உருவாக்கும் விதமான பல அரிய சிற்பக்கலை படைப்புக்களைக் கொண்ட இக்கோயில் கலை பொக்கிஷமாகும். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகளும், தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளைக் காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் நம் முன்னோர்களின் கலைநுணுக்கத்தை பிரதிபலிக்கும் சான்றுகளாக உள்ளன. இந்த கோயில் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்கள் நிறைந்துள்ளன. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டு இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைப் போல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சந்நதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனிக் கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் கொண்டது.

கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும். முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டு பின்னர் ஐராவதீஸ்வரர் என பெயர் வழங்கப்பட்டது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன. முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன. கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக்கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இங்கு சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலக்கிராம லிங்கம் பிராகாரத்தில் காணப்படுகிறது.

கோயிலின் வெளிச்சுவர்களில் மூன்று முகங்கள், எட்டு கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாரியும். கீழ்க்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் என பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகளை பார்க்கும் யாராக இருந்தாலும் நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிடுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அவசியம் நீங்களும் கலை நுணுக்கத்தின் பெட்டகமாக உள்ள தாரா
சுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்குச்சென்று வாருங்கள்.

The post தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் : உலகப் பாரம்பரியச் சின்னம் appeared first on Dinakaran.

Tags : Tarasuram Iravadeswarar Temple ,Thanjavur ,Tamil Nadu ,Kumbakonam ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...