×

கூட்டுறவு வங்கி காசாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது 10 மாதங்களுக்கு பிறகு திருப்பத்தூரில் சிக்கினர் தண்டராம்பட்டு அருகே நடந்த சம்பவம்

தண்டராம்பட்டு, ஆக.8: தண்டராம்பட்டு அருகே கூட்டுறவு வங்கி காசாளர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தண்டராம்பட்டு தாலுகா, பெருந்துறைப்பட்டு ஊராட்சி, எடக்கல் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி(52). இவர் தென்கரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். மகளிர் சுயஉதவிக்குழு கடன் முறைகேடு சம்பவத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிந்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். ஆனால், எந்தவிதமான தடயமும் கிடைக்காததால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இதையடுத்து, எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த பக்கத்து நிலத்துக்காரர் சுப்பிரமணி(58) என்பவர், நிலத்திற்கு செல்லும் வழி தகராறு காரணமாக ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த விஷ்ணு(29), கமலகண்ணன், ஜோயல் ஆகிய 3 பேரின் உதவியோடு காசாளர் வீராசாமியை அடித்து கொலை செய்து கிணற்றில் சடலம் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, சுப்பிரமணி, விஷ்ணு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் கமலகண்ணன் ஜோயல் ஆகியோரை தேடிவந்தனர். இந்நிலையில், திருப்பத்தூரில் பதுங்கியிருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

The post கூட்டுறவு வங்கி காசாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது 10 மாதங்களுக்கு பிறகு திருப்பத்தூரில் சிக்கினர் தண்டராம்பட்டு அருகே நடந்த சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Thandaramptu ,Thandarampatu ,
× RELATED ஊருக்கு வெளியே தனியாக புதிய சுவாமி...