×

தாயின் 50 ஆண்டு வேண்டுதலை நிைறவேற்ற பேரக்குழந்தைகள் முன்னிலையில் 55, 52 வயது சகோதரர்களுக்கு காதணி விழா

* சீர்வரிசை வைத்து உறவினர்கள் அசத்தல்
* அணைக்கட்டு அருகே சுவாரஸ்ய நிகழ்வு

அணைக்கட்டு, ஆக.8: அணைக்கட்டு அருகே தாயின் வேண்டுதலை நிறைவேற்ற பேரக்குழந்தைகள் முன்னிலையில் 55, 52 வயது சகோதர்களுக்கு காதணி விழா நடந்தது. அப்போது உறவினர்கள் சீர்வரிசைகளை வைத்து அசத்தியது அப்பகுதி மக்களிைடயே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மருதவல்லிபாளையம் ஊராட்சி ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி கண்ணம்மாள்(80). இதில் கோவிந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு ராமமூர்த்தி, சேகர், ஆண்டாள், விசாலாட்சி, முனிவேல், ராஜா, ராஜகிளி என்று 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களில் விவசாய கூலித்தொழிலாளிகளான முனிவேல்(55), ராஜா(52) ஆகியோருக்கு சிறுவயதில் காது குத்தவில்லையாம். தற்போது முனிவேலுக்கு திருமணமாகி பேரக்குழந்தைகள் உள்ளனர். அதேபோல், ராஜாவுக்கும் திருமணமாகி வேலைக்கு செல்ல கூடிய அளவில் மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அனைத்து குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே காதுகுத்தி வேண்டுதலை நிறைவேற்றிய கோவிந்தசாமி-கண்ணம்மாள் தம்பதியினர் முனிவேல், ராஜாவுக்கு மட்டும் காது குத்தவில்லையாம். இதனால் கடந்த 50 ஆண்டுகளாக வேண்டுதலை நிைறவேற்ற வேண்டும் என கண்ணம்மாள் கூறி வந்துள்ளார். அவருடைய வேண்டுதலை நிைறவேற்ற காதணி விழா நடத்துவது என குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, முனிவேல் மற்றும் ராஜாவுக்கு அதேகிராமத்தில் உள்ள குலதெய்வமான கன்னியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் சகோதர- சகோதரிகள், மகன்கள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மொட்டை அடித்து காது குத்தப்பட்டது. அப்போது அவர்களது 85 வயதான தாய்மாமன் நடுவில் அமர்ந்திருந்தார்.

மேலும் உறவினர்கள் பலகாரங்களை சீர்வரிசைகளாக வைத்து அசத்தினர். தாத்தாக்கள் முன்னிலையில் பேரன்கள், பேத்திகளை தாய்மாமன் மடியில் அமர்த்தி காது குத்துவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தாயின் வேண்டுதலை நிறைவேற்ற பேரன், பேத்தி, மகன்கள், உறவினர்கள் முன்னிலையில் தாத்தா வயதுடைய சகோதரர்கள் காது குத்திக்கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முனிவேல், ராஜா குடும்பத்தினர் கூறுகையில், ‘தாயின் நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றியாக வேண்டும் என முடிவு செய்த குடும்பத்தினர் சகோதரர்கள் இருவருக்கும் காது குத்தி வேண்டுதலை நிறைவேற்றி உள்ளோம். தாயின் வேண்டுதலையும் ஆசையையும் நிறைவேற்ற எதையும் செய்யலாம்’ என்றனர்.

The post தாயின் 50 ஆண்டு வேண்டுதலை நிைறவேற்ற பேரக்குழந்தைகள் முன்னிலையில் 55, 52 வயது சகோதரர்களுக்கு காதணி விழா appeared first on Dinakaran.

Tags : Damkatu ,
× RELATED புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு...