- அடிபெறு
- திருப்பணி முருகன் கோயில்
- கிருத்திகை
- திருவள்ளூர்
- திருத்தணி முருகன் கோயில்
- கிருத்திகை
- திருவள்ளூர் மாவட்டம்...
திருவள்ளூர்: ஆடிப்பெருக்கு, கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பல்வேறு முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை பெருவிழா நேற்று தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் அறிவுறுத்தியபடி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தினால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மலைக் கோயிலில் 53 நிரந்தர குடிநீர் இணைப்புகளும், மற்ற இடங்களில் 17 குடிநீர் இணைப்புகளும், தற்காலிகமாக 32 கூடுதல் குடிநீர் இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மலைக்கோயில் மற்றும் இதர இடங்களில் 60 கழிவறைகள் மற்றும் கூடுதலாக 72 கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மலைக்கோயில் மற்றும் இதர இடங்களில் 30 நிரந்தர குளியல் அறைகள் மற்றும் கூடுதலாக 18 குளியலறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மலைக்கோயிலில் 106 சிசிடிவி கேமராக்களும், இதர இடங்களில் 36 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. திருக்கோயிலில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்காக மின்சார துறையினரால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருக்கோயிலுக்கு வருகை புரியும் குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க கோயில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் மலைக் கோயிலில் அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக 10 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 108 அவசர ஆம்புலன்ஸ் மலைக்கோயிலில் சரவணப்பொய்கை மற்றும் நல்லாங்குளம் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட உள்ளன. அவசரகால உதவிக்கு சரவணப்பொய்கை, மலைக்கோயில், நல்லாங்குளம், அரக்கோணம் சாலை மற்றும் சித்தூர் சாலை ஆகிய இடங்களில் 5 தீயணைப்பு வாகன ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. ரயில்வே துறையின் சார்பாக பக்தர்கள் திருக்கோயிலுக்கு சென்று வருவதற்காக கூடுதல் சிறப்பு தொடர் வண்டிகள் இயக்கப்பட உள்ளன.
பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு முடி காணிக்கை கொட்டகைகள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்கள் திருத்தணியில் இருந்து மலைக் கோயிலுக்கு சென்று வருவதற்கு 5 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கவும், பிற ஊர்களில் இருந்து திருத்தணி சென்று வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக திருத்தணி கட்டணம் இல்லா தொலைபேசி எண்: 18005995243, 8122189612, 8122189613 மற்றும் 8122189614 ஆகிய எண்களில் உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
The post ஆடிப்பெருக்கு, கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் முன்னேற்பாடுகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.