×

தகுதி நீக்க உத்தரவு வாபஸ் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆனார்: மக்களவை கூட்டத்தில் 4 மாதத்துக்கு பின் பங்கேற்றார்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் நேற்று வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் அவர் எம்பி ஆனார். சுமார் 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் மக்களவைக்கு வந்தார். அவரை இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் வாழ்த்தி வரவேற்றனர். கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, ‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி’ என ராகுல் பேசியது சர்ச்சையானது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, மறுநாளே ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டு, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுலின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து, ராகுலின் பதவி பறிக்கப்பட்டதைப் போலவே உடனடியாக அவருக்கு மீண்டும் எம்பி பதவி வழங்க வேண்டுமென மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் தலைவர்கள் முறையிட்டனர். ஆனால் வார விடுமுறையை காரணம் காட்டி, எம்பி பதவி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

திங்கட்கிழமை நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது ராகுலின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை சபாநாயகர் வாபஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, வார விடுமுறைக்குப் பின் நாடாளுமன்றம் நேற்று காலை கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே, ராகுலின் தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெறுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். காங்கிரஸ் தலைமையகத்தில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கியும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு இனிப்பு ஊட்டி கொண்டாடினார். இதைத் தொடர்ந்து, ராகுல் மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவைக்கு செல்லும் முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் அவையின் நுழைவாயிலில் கூடி வாழ்த்து கோஷமிட்டு ராகுலை வரவேற்றனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காலையில் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் தொடங்கிய போது, ராகுல் மக்களவைக்கு வந்தார். கடந்த மார்ச் 24ம் தேதி ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு (138 நாட்கள்) தற்போது மக்களவைக்கு அவர் மீண்டும் எம்பியாக திரும்பியிருக்கிறார். அது மட்டுமின்றி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் தொடங்கும் நிலையில் ராகுல் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கி நாளை வரை நடக்க உள்ளது. விவாதத்திற்கு நாளை மறுதினம் பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார். மணிப்பூர் விவகாரத்தால் பிரதமர் மோடியை பேச வைப்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருப்பதால் இதில் அனல் தெறிக்கும் விவாதங்கள் நடைபெறும் என்பது நிச்சயம். இதில் ராகுலும் பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* கடந்த மார்ச் 23ம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
* தீர்ப்பு வெளியான அடுத்த நாளே (மார்ச் 24) ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
* கடந்த 4ம் தேதி ராகுலின் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது.
* உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து 3 நாட்களுக்கு பிறகே தகுதி நீக்க உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

* உண்மைக்கு கிடைத்த வெற்றி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தனது டிவிட்டரில், ‘‘ராகுல் காந்தியை மீண்டும் எம்பியாக நியமிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இது இந்திய மக்களுக்கும், குறிப்பாக வயநாட்டுக்கும் நிம்மதியைத் தருகிறது. பாஜ தனது எஞ்சிய பதவிக்காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதை வி,ட ஆட்சியில் உண்மையாக கவனம் செலுத்த வேண்டும்’’ என கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசுகையில், ‘‘ஜனநாயகம் வென்றது, இந்தியா வென்றது. உண்மையை பேசும் ராகுலின் குரலை ஒருபோதும் அடக்க முடியாது’’ என்றார். மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் பிரமோத் திவாரி, ‘‘உண்மை வென்றது, பொய் தோற்கடிக்கப்பட்டது, இந்தியா வென்றது, ராகுல் காந்தி வென்றார், மோடி, உங்களின் தோல்வி தொடங்கியது’’ என்றார்.

* டிவிட்டர் பயோ மாற்றம்
தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் சுயவிவரத்தில் ‘தகுதியான ‘நீக்கப்பட்ட’ எம்பி’ (‘‘Dis’Qualified MP) எனப் பொருள்படும்படி மாற்றி இருந்தார். தற்போது மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பழையபடி ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ என அதை மாற்றினார்.

The post தகுதி நீக்க உத்தரவு வாபஸ் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆனார்: மக்களவை கூட்டத்தில் 4 மாதத்துக்கு பின் பங்கேற்றார் appeared first on Dinakaran.

Tags : Raqul Gandhi ,M. B ,New Delhi ,Congress ,Rahaul Gandhi ,Secretariat ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...