×

நள்ளிரவில் பசியில் அழுதபோது 2 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது

காஞ்சிபுரம்:ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(25). இவரது மனைவி அஞ்சலி(23). இவர்களுக்கு ரூத்(6), சமீரா(4) மற்றும் பிறந்து 2 மாதமான கங்கோத்திரி ஆகிய குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களாக தம்பதியர் இருவரும் திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் கீழ் தங்கி கூலி வேலை செய்து பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை பொறுக்கி இரும்பு கடையில் விற்பனை செய்யும் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தை அழுதுள்ளது. குழந்தைக்கு பால் கொடுக்குமாறு தன்னுடைய மனைவியிடம் சுரேஷ் கூறியுள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போதையில் இருந்த சுரேஷ், இரண்டு மாத பெண் குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 2 மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் மற்றும் காவலர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு மாத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நள்ளிரவில் பசியில் அழுதபோது 2 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Suresh ,Ananthapuram ,Andhra Pradesh ,Anjali ,Ruth ,Sameera ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...