×

சரவம்பாக்கம் ஊராட்சியில் மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் குடிநீர்

செய்யூர்: சரவம்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரை சமூக விரோதிகள் மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பதால் அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம் சரவம்பாக்கம் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு அங்குள்ள 30 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்த காரணத்தினால் இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இவ்வாறு இருக்க இங்குள்ள தனிநபர்கள் பலர் 1 எச்பி மின் மோட்டார் வாங்கி அதனை பைப்லைன் உடன் இணைத்து குடிநீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். இதனால் மற்ற குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் விநியோகம் செய்யப்படும் குழாய்களில் பலர் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் எங்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் சமூக விரோதிகள் பலர் பணம் கொடுத்து மின்மோட்டோர்கள் வாங்கி பைப் லைனில் இணைப்பு கொடுத்து குடிநீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது அபராதம் விதித்து எங்களுக்கு சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சரவம்பாக்கம் ஊராட்சியில் மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Saravambakkam panchayat ,Seyyur ,
× RELATED மதுராந்தகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு