ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டு விலக நினைக்கிறேன் என்று முதல்வர் அசோக் கெலாட் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வராக உள்ள அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதை தற்போதுதான் காங்கிரஸ் தலைமை சரி செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று புதிதாக மாவட்டங்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் முதல்வர் பதவியை விட்டு விலக நினைப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும் என்பது என் நினைவுக்கு வருகிறது. நான் ஏன் விலக வேண்டும் என்பது ஒரு மர்மம். ஆனால் முதல்வர் பதவி என்னை விட்டு விலகவில்லை. முதல்வர் பதவி விஷயத்தில் கட்சித்தலைமை எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் நான் முதல்வர் பதவியில் இருந்து வெளியேற விரும்புகிறேன் என்று கூறுவதற்கு தைரியம் தேவை. ஆனால் இப்போது உள்ள நிலை என்னை வெளியேற அனுமதிக்கவில்லை.
சோனியா காந்தியால் 3 முறை முதல்வராக பதவியேற்றுள்ளேன். இது சிறிய விஷயம் அல்ல. கட்சி வெற்றி பெற்றால், மற்றொரு முறை முதல்வராக பதவியேற்க வேண்டியதுகூட வரலாம். ஆனால் 2030ல் எனது பணியின் காரணமாக, புதிய வலுவான ராஜஸ்தான் உருவாகி விடும். நான் ஏன் 2030 பற்றி பேசுகிறேன்? நான் கல்வி, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர் மற்றும் சாலை ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளேன். எனவே நான் ஏன் தொடர்ந்து முன்னேறி செல்லக்கூடாது என்று எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post முதல்வர் பதவியை விட்டு நான் விலக நினைக்கிறேன்: ராஜஸ்தான் முதல்வர் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

