×

ஆசிய சாம்பியன்ஸ் போட்டியை பார்க்க ஆர்வம்; குமரியில் ஹாக்கி பயிற்சி மைதானம் அமைக்கப்படுமா?.. மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி விளையாட்டு போட்டி, சென்னையில் நடந்து வருகிறது. இந்தியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியை மாநிலம் முழுவதும் உள்ளவர்கள் காணும் வகையில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், அகண்ட திரையில் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில், அகண்ட திரை மூலம் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதை விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே ஹாக்கி மீதான ஆர்வம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு இணையாக குமரி மாவட்டத்தில் உள்ள நகர, கிராமப்புறங்களில் ஹாக்கி வீரர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனால் ஹாக்கிக்கு பயிற்சி பெற போதிய மைதானம் இல்லை.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஹாக்கி பயிற்சி மைதானம் கிடையாது. இதனால் ஹாக்கி விளையாட விரும்பும் மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைகிறார்கள். தமிழ்நாடு அரசு அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் துரிதப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கூறுகையில், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஹாக்கி பயிற்சியாளர் உள்ளார். அவருக்கு மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ஆனால் மைதானம் கிடையாது. தனியார் பள்ளியில் உள்ள மைதானத்தில் தான், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் ஆர்வம் உள்ளவர்கள் முறையாக பயிற்சிக்கு செல்ல முடிய வில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குமரி மாவட்டத்தில் ஹாக்கி பயிற்சி மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்தியா – பாக். 9ம் தேதி மோதல்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வருகிற 9ம்தேதி (புதன்) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இந்த போட்டி ஒளிபரப்பை காண அதிகளவில் பயணிகள், இளைஞர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்துள்ளதாக மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் கூறினார்.

The post ஆசிய சாம்பியன்ஸ் போட்டியை பார்க்க ஆர்வம்; குமரியில் ஹாக்கி பயிற்சி மைதானம் அமைக்கப்படுமா?.. மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Asian Champions Match ,Kumary ,Nagargo ,Kumari district ,Training ,Kumari ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...