×

வனப்பகுதியில் ஆடு மேய்த்தபோது கள்ளக்காதலில் அண்ணனுக்கு பதில் தம்பி மீது துப்பாக்கிச் சூடு: ஜவ்வாதுமலையில் பரபரப்பு

போளூர்: ஜவ்வாதுமலையில் வனப்பகுதியில் ஆடு மேய்த்தபோது, கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணனுக்கு பதில் தம்பி மீது துப்பாக்கி சூடு நடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்துர் அடுத்த மேல்விளாமுச்சி கிராமத்தை சேர்ந்தவர் காசி(35), தொழிலாளி. மேல்சிலம்பாடி அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(30). இவர்கள் இருவரும் நண்பர்கள். இதில் சேட்டுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது நண்பர் காசி வீட்டிற்கு சேட்டு அடிக்கடி வந்து செல்வார். அப்போது காசி மனைவி சுகுணாவிற்கும் சேட்டுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசி வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டிலிருந்து சேட்டு வெளியே வந்துள்ளார். இதனை காசியின் உறவினர் ஒருவர் பார்த்து அவரை பிடிக்க துரத்தி உள்ளார். ஆனால் அவர் சிக்காமல் ஓடிவிட்டார். இந்த தகவல் ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்தவுடன் காசி ஆத்திரமடைந்தார். இதற்கிடையில், சேட்டுவும், காசியின் மனைவி சுகுணாவும் கடந்த ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர். பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால், தனது மனைவியை சேட்டு கடத்தி சென்றதாக ஜமுனாமரத்தூர் போலீசில் கடந்த ஜூலை 9ம் தேதி காசி புகார் கொடுத்தார்.இந்நிலையில், ஒரு வாரம் கழித்து கள்ளக்காதல் ஜோடி மீண்டும் ஊர் திரும்பியது. அப்போது முதல் சேட்டுவுக்கும், மனைவி சுகுணாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சேட்டுவை தீர்த்துக்கட்ட காசி திட்டம் தீட்டினார். அதன்படி, மோட்டூர் கிராமத்தில் இருந்து சேட்டு தினமும் காலையில் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஆடுகள் மேய்க்க செல்வதை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கத்திற்கு மாறாக சேட்டு ஆடு மேய்க்க செல்லாமல், தனக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு தனது தம்பி கார்த்திக்(25) என்பவரை ஆடுமேய்க்க அனுப்பி உள்ளார். தொடர்ந்து கார்த்திக், அவரது மனைவி சினேகா ஆகிய இருவரும் காட்டில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அண்ணன் சேட்டுவும், கார்த்திக்கும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் அவரை சேட்டு என நினைத்து புதர் மறைவில் மறைந்து கொண்டிருந்த காசி நாட்டுத்துப்பாக்கியால், கார்த்திக்கை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் கார்த்திக் உடலில் பல்வேறு இடங்களில் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி சினேகா அலறியடித்து ஓடிச்சென்று உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த அண்ணன் சேட்டு மற்றும் உறவினர்கள் கார்த்திக்கை மீட்டு ஜமுனாமரத்துர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சேட்டு கொடுத்த புகாரின்பேரில், ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் உத்தரவின்பேரில் போளூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் கலசபாக்கம் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், ஜமுனாமரத்துர் சப்- இன்ஸ்பெக்டர்கள் முருகன், குபேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று மாலை காட்டில் பதுங்கி இருந்த காசியை மலைவாழ் மக்கள் உதவியுடன் பிடித்து கைது செய்தனர். மேலும், அவர் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post வனப்பகுதியில் ஆடு மேய்த்தபோது கள்ளக்காதலில் அண்ணனுக்கு பதில் தம்பி மீது துப்பாக்கிச் சூடு: ஜவ்வாதுமலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Jawatumalai ,Jawadumalai ,Thumbi ,
× RELATED நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன்...