×

அதிமுகவுடன் மீண்டும் மோதல் எதிரொலி அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்?.. மதுரை பொதுக்கூட்டம், விருதுநகர் நடைபயணம் ரத்து, பரபரப்பு தகவல்கள்

சென்னை: அதிமுகவுடனான மோதல் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து டெல்லி தலைமை அழைப்பின்பேரில், மதுரை பொதுக்கூட்டம், விருதுநகர் நடைபயணத்தை அண்ணாமலை ரத்து செய்து உள்ளார். அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த மாதம் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவரின் யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் இந்த விழாவை அவர் அதிரடியாக புறக்கணித்தார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டும் கலந்து கொண்டார். ஆனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு இல்லை. இதனால், அவரும் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவை புறக்கணித்தார். இதற்கிடையில் நடைபயணத்தின் போது பேசிய பாஜ தலைவர் அண்ணாமலை, ‘ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒதுக்கி வைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்’ என்றும் கூறினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் கருத்து தெரிவித்தார். அண்ணாமலை எங்களுக்கு ‘Just like’ அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம்.

கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?’’ என்று கூறியிருந்தார். அதாவது, பாஜவுடன் பேச்சுவார்த்தை என்றால் இந்த 3 பேரிடம் மட்டும் தான். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் இல்லை என்ற வகையில் அவரின் கருத்து இருந்தது. செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது’ என்று பதிலடி கொடுத்தார். இதற்கு ஆவேசமாக பதில் கொடுத்த செல்லூர் ராஜு, ‘அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. கட்சியில் சேர்ந்து ஒரே ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார்.

அண்ணாமலையின் கருத்துகளை நான் பொருட்படுத்துவதில்லை. எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம்’’ என்று தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார்’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதேபோல் பொன்னையனும், அண்ணாமலை ஆசைப்படலாம். ஆனால் தமிழகத்தில் பாஜவுக்கு வாய்ப்பே இல்லை’ என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜ மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. ஒருவருக்கொருவர் இரண்டு கட்சியினரும் மாறி, மாறி கருத்துக்களை தெரிவித்து வருவதால் இரு கட்சிக்குள்ளும் ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக-பாஜ உறவில் விரிசல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் விவகாரத்தை அடுத்து அண்ணாமலையை பாஜ மேலிடம் திடீரென டெல்லி அழைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை மதுரையில் நடைபயணம் மேற்கொண்ட அவர், மாலையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, மதியம் 1.15 மணியளவில் விமானத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்தார். இன்று விருதுநகரில் நடக்கும் நடைபயணத்தையும் அண்ணாமலை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இன்று அண்ணாமலை டெல்லி செல்லலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அண்ணாமலை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படும் என்று தெரிகிறது. அண்ணாமலை டெல்லி பயணம் கட்சியினருக்கே தெரியாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரது டெல்லி பயணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அமித்ஷா அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து ஒரு வாரம் காலம் தான் ஆகிறது. அதற்குள் அண்ணாமலையை பயணத்தை ஒத்தி வைத்து விட்டு டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இது தமிழக பாஜவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிமுகவுடன் மீண்டும் மோதல் எதிரொலி அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்?.. மதுரை பொதுக்கூட்டம், விருதுநகர் நடைபயணம் ரத்து, பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Delhi ,Madurai Public Meeting ,Vrudunagar ,Stirma ,Chennai ,Annamalai ,Virudunagar ,Ayakkar ,Dinakaran ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...