×

தமிழ்நாட்டில் 18 ஸ்டேஷன்கள் உட்பட 508 ரயில் நிலையங்கள் நவீன மயம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் உட்பட 27 மாநிலங்களில் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் நவீனமயமாக்கும் பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அமிர்த பாரத ரயில் நிலைய திட்டத்தின் கீழ் 1,309 ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒன்றிய அமைச்சரவை கடந்தாண்டு ஒப்புதல் வழங்கியது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் தமிழகம் உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 508 ரயில் நிலையங்களில் ரூ.24,470 கோடி மதிப்பில் அடுத்த 2 ஆண்டுகளில் சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களில் லிப்ட் வசதி, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமிரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். மேலும் ரயில் நிலைய கட்டிடங்களின் வடிவமைப்பானது உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியத்தை போற்றும் வகையில் அழகுபடுத்தப்படும். ஒன்றிய ரயில்வே துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்கள், பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்குவங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்ட்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, அரியானாவில் 15, கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் சீரமைக்கும் திட்டப்பணிக்களுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: சில எதிர்க்கட்சிகள், தங்களும் வேலை செய்யக் கூடாது, பிறரையும் வேலை செய்ய விடக்கூடாது என்ற கொள்கையில் உள்ளன. நவீன நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளில் ஒரு தரப்பினர் அதை எதிர்த்தனர். 70 ஆண்டுகளாக அவர்கள் தியாகிகளுக்கு போர் நினைவிடம் கட்டவில்லை. ஆனால், நாங்கள் கட்டிய போது கொஞ்சமும் வெட்கமில்லாமல் அதை எதிர்த்தனர்.

சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை உலகின் மிகப்பெரிய சிலை. இதைப் பற்றி இந்தியர்கள் பெருமை கொள்கிறார்கள். ஆனால் சில கட்சிகள், தேர்தலின் போது மட்டுமே இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான படேலை நினைவு கூருகின்றன. ஆனால் அக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் யாருமே இதுவரை படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்த அங்கு நேரில் சென்றதில்லை. இவ்வாறு எதிர்க்கட்சிகள் இப்போது எதிர்மறை அரசியலில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் எதிர்மறை அரசியலுக்கு அப்பால் உயர்ந்து, வளர்ச்சிக்கு, பணி முறைக்கு முன்னுரிமை அளித்து நேர்மையான அரசியல் பாதையில் செல்கிறோம். ‘வெள்ளையனே வெளியேறு’ என மகாத்மா காந்தி முழங்கியதைப் போல, முழுநாடும் இப்போது ஊழலை, வாரிசு அரசியலை, திருப்திபடுத்தும் அரசியலை ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என நாட்டு மக்கள் உறுதியுடன் கூறி வருகின்றனர்.

இன்று உலக நாடுகளின் கவனம் இந்தியா மீது உள்ளது. உலக அளவில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்துள்ளது. இந்தியா மீதான உலகின் அணுகுமுறை மாறிவிட்டது. இதற்குப் பின்னால் 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தியர்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுக்குப் பிறகு முழு பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுத்தனர், இரண்டாவதாக முழு பெரும்பான்மை அரசு முக்கிய முடிவுகளை எடுத்து நாட்டின் முன் உள்ள சவால்களுக்கு நிரந்தர தீர்வுக்காக தொடர்ந்து உழைக்கிறது. வளர்ச்சி அடையும் இலக்கை நோக்கிச் செல்லும் இந்தியா, புதிய ஆற்றல், புதிய உத்வேகம் மற்றும் புதிய தீர்மானங்களுடன் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* டிக்கெட் கட்டணம் உயருமா?
ரயில் நிலைய மேம்பாட்டு பணியால், ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு நேற்று பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘சாமானிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவே பிரதமர் மோடி பாடுபடுகிறார். அதே நோக்கத்துடன்தான் இந்த ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளும் நடக்கிறது. எந்த சுமையையும் ஏற்றாமல் உலகத்தரமான ரயில் நிலையங்களை வழங்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். எனவே, மேம்பாட்டு பணியை காரணம் காட்டி டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது. இந்த திட்டத்தில் எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டவில்லை’’ என்றார்.

* வரி செலுத்துவோர் அரசை நம்புகின்றனர்
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மக்கள் நீண்ட காலமாக தாங்கள் செலுத்தும் வரிகளால் எந்த பயனும் இல்லை, கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் ஊழல் செய்யப்படுகிறது என கருதினர். இந்த எண்ணத்தை பாஜ அரசு மாற்றி உள்ளது. இன்று மக்கள் தங்கள் வரிப்பணம் தேசத்தை கட்டியெழுப்ப பயன்படுத்தப்படுவதாக நம்புகிறார்கள். இதன் காரணமாக வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் ரூ.2 லட்சம் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட்டது. இன்று ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்குக் கூட வரி விதிக்கப்படுவதில்லை. இருந்த போதிலும் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்றார்.

The post தமிழ்நாட்டில் 18 ஸ்டேஷன்கள் உட்பட 508 ரயில் நிலையங்கள் நவீன மயம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,PM Modi ,New Delhi ,Dinakaran ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...